சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கும்போது, அந்த சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பிக்காதபடி உரிய நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி பத்மாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமலும், அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை முறையாகப் பரிசீலிக்காமலும், அறிவுரைக் குழுமம் கால தாமதமாகத் தனது கணவனைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது” என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிவுரைக் குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசு இயந்திரம் தன்னிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதைச் சுட்டிக் காட்டினர் நீதிபதிகள். செந்திலைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.
“சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகக் குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தைப் பயன்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கும்போது, சமூக விரோதிகள் எளிதில் அச்சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் இருக்கச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.�,”