கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளை முன்னெடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ். கஜா புயலால் லட்சக்கணக்கானோர் பெரும் அழிவைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்கும் விதமாக வீடுகள் இழந்த மக்களுக்காக ஐம்பது வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளார் லாரன்ஸ்.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதம் தேவை. கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும்போது வேதனை அடைந்தேன்..
எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலைவணங்குகிறேன்…
ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்க்கதியாய் ஒரு குடும்பம் பற்றிப் பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்.. அந்தக் குடிசை வீடு அழகாகக் கட்டித்தர எவ்வளவு ஆகும். மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் ஆகும்.
அந்த வீடு மட்டுமில்லை. இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளைக் கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் நானே நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,