இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இன்று (நவம்பர் 11) நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியுள்ளது.
இந்திய அணியுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் இலங்கை அணி விளையாட உள்ளது. 16ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர், இந்திய வாரியத் தலைவர் அணியுடன் இலங்கை அணி பயிற்சி ஆட்டத்தை இன்று விளையாடியது. டாஸ் வென்ற இந்திய வாரியத் தலைவர் அணி பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக சண்டீரா சமரவிக்ரமா, திமுத் கருனரத்னே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் பந்து வீச்சினை சிறப்பாகச் சமாளித்து அரைசதம் அடித்தனர். 134 ரன்களை எட்டியபோது சமரவிக்ரமா 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் திமுத் கருனரத்னே அரைசதம் அடித்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இந்திய அணி அதன் பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை கைப்பற்றத் தொடங்கியது. ஆனால் முன்னணி வீரர்களான மேத்யூஸ், நிரோஷன் ஆகியோர் ஆளுக்கொரு அரைசதம் அடித்தனர்.இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது.
இலங்கை அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் ரன் சேர்த்தது அந்த அணியினரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் எனினும், அதிக அனுபவமுள்ள இந்திய அணியின் பந்து வீச்சினை இலங்கை அணி தாக்குப் பிடிக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வாரியத் தலைவர் அணி நாளை பேட்டிங் செய்யவுள்ளது. நாளை இலங்கை அணியின் பந்து வீச்சு எவ்வாறு உள்ளது என்பது குறித்து இந்திய அணிக்கு ஒரு திட்டம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,