தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்க வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வரும் 5ஆம் தேதியன்று இரவு 8 மணி முதல் 6ஆம் தேதி மாலை 8 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தது.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2014, 2015, 2016, 2017ஆம் ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் இதேபோன்ற அறிவிப்பினை வெளியிட்டபோது, இக்கருத்தை தெரிவித்திருந்தது உயர் நீதிமன்றம்.
“தீபாவளியன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திப்பார்கள். அதனால், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். அதைச் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்” என்று கோரி, சேலம் ஆத்தூரைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று (நவம்பர் 1) விசாரித்தது நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு. அப்போது, “அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தின்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசரச் சேவைகளை வழங்கும் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது” என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள். அதனால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தொடரும் பிரச்சினையாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் இருப்பதால், இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை, வரும் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.�,