அதிமுகவுடன் அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் மீண்டும் இணைவார் என்று மதுரை ஆதீனம் கூறியதையடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துத் தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. எதிரும் புதிருமாக இருந்த கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை ஆதீனம், தினகரனுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்று கூறியிருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து ட்வீட் செய்த தினகரன், மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1) கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் மீண்டும் அதே கருத்தையே சொல்லியிருக்கிறார். “மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெறும். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைவார் என்று கூறியதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். அப்படியானால் அதிமுகவுக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தினகரன் சொல்வாரா? மக்களவைத் தேர்தலில் இல்லை என்றாலும் அதற்கு பிறகு அவர் நிச்சயம் அதிமுகவில் இணைவார். இதற்கு மறைமுகமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் அதிமுகவுடன், தினகரன் இணையும் காலம் வரும் பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியிருக்கிறார் ஆதீனம்.
இந்நிலையில் மதுரை ஆதீனம் கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள தினகரன், அதிமுக அமமுக இணைவதாகக் கூறியதற்கு ஏற்கனவே மறுப்புத் தெரிவித்திருந்தேன். அதன்மூலமாவது ஆதீனம் உண்மை நிலையை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் அவர் மீண்டும் இன்று அதே கருத்துகளைச் சொல்லியிருப்பதைப் பார்த்தால், தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் பி.ஆர்.ஓ வேலையை அவர் இன்னமும் மறக்கவில்லை போலும். எங்களுக்கே தெரியாமல் இணைப்பு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று அவர் கூறுவதைப் பார்த்தால் யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார் போல. அவர் சொல்வது உண்மையானால் அதைச் செய்வது யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இப்படித் தொடர்ந்து பொய் செய்திகள் பரப்பினால் மதுரை ஆதீன மடத்தின் பெயரை காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.�,