_ஆட்டத்தை மாற்றிய அந்த ஒரு விக்கெட்!

Published On:

| By Balaji

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருகும் அலெஸ்டர் குக்கின் விக்கெட் நேற்றைய ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் அலெஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய ஜடேஜா, உணவு இடைவேளைக்கு முன்னர் இந்த ஜோடியை பிரித்தார். ஜென்னிங்ஸ் 23 ரன்கள் சேர்த்து ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த மொயீன் அலி, குக்குடன் ஜோடி சேர்ந்து உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்.

உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 1 விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. அதுவரை இந்த ஜோடியை பிரிக்க கோலி எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக அலெஸ்டர் குக் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஒரு விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் அதே ஓவரில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியது.

இதனையடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆட விரும்பவில்லை. வந்த வேகத்தில் வெளியேறிய வண்ணம் இருந்தனர். ஸ்டோக்ஸ் 11 ரன்களிலும், ஜானி பேரிஸ்டோ, சாம் கரன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குக் ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை பின்வரிசை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.

நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜாஸ் பட்லர் 11 ரன்களுடனும், அடில் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel