நா.ரகுநாத்
திருமண வயதை அடைந்த, இருவேறு சாதியைச் சேர்ந்த பெண்ணும் ஆணும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், அதைச் செய்ததற்கு அவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது இந்தியாவின் பல மாநிலங்களில் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற கொலைகள் “ஆணவக் கொலைகள்” என்று அழைக்கப்படுகின்றன. ஒரு பெண், வேறு சாதியைச் சேர்ந்த ஆணை விரும்பித் திருமணம் செய்துகொண்டால், சாதிப் பெருமையும் குடும்ப கௌரவமும் பாதிக்கப்பட்டுவிட்டதாக அந்தப் பெண்ணின் குடும்பம் கருதுவதன் விளைவாகவே இந்த கௌரவக் கொலைகள் நடக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடங்கி தமிழகத்தில் மட்டும் 200 ஆணவக் கொலைகள் நடந்திருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் நடந்தேறும் இந்த ஆணவக் கொலைகள் பற்றி The Hindu Frontline 2020 மார்ச் 13 பதிப்பில் இளங்கோவன் ராஜசேகரன் எழுதியுள்ள விரிவான கட்டுரைகள் நம்மைக் கதிகலங்க வைக்கின்றன.
மாதவிலக்காகும் பெண்கள் தனியாக ‘கெஸ்ட் ஹவுஸ்’களில் ஒதுக்கிவைக்கப்படும் அவலம், மதுரை மாவட்டத்திலுள்ள கூவலபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ‘ஊர் கட்டுப்பாடு’ எனும் பெயரால் பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கம். இதைப்பற்றி சமீபத்தில் People’s Archive of Rural Indiaவின் இணையப்பக்கத்தில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் எழுதிய கட்டுரை பல அதிர்ச்சிகரமான தகவல்களை நமக்கு வழங்குகிறது. மாதவிலக்காகும் பெண்கள் ‘மாசடைந்தவர்கள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டு கழிவறைகூட இல்லாத அறைகளில் தனித்து வைக்கப்படுகின்றனர். ‘கலாச்சாரம்’, ‘நம்பிக்கை சார்ந்த மரபு’, ‘கடவுளுக்கு செலுத்தும் மரியாதை’ என்ற மூடநம்பிக்கைகளின் போர்வையில் அரங்கேறும் பாலினப் பாகுபாடுகளில் ஒன்றுதான் கூவலபுரம் போன்ற கிராமங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தப் பிற்போக்குத்தனமான வழக்கம்.
“கூவலபுரம் பகுதியில் பெரிதாக பகுத்தறிவு இல்லை. சித்தருக்கு மரியாதை செலுத்தும் நம்பிக்கை இது எனக் கிராமத்தினர் கூறுகிறார்கள். இந்த நம்பிக்கைக்குச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களும் கட்டுப்பட்டுள்ளது” என்று எழுதுகிறார் கவிதா முரளிதரன்.
**பெண்கள் போடும் எதிர்நீச்சல்!**
பணமதிப்பு நீக்கம் (Demonetization) மற்றும் ஜிஎஸ்டி (GST) நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான விசைத்தறி ஆலைகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகரங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியான பாதிப்பின் பெருஞ்சுமையைப் பெண்களே சுமக்கின்றனர். விசைத்தறி ஆலைகள் மூடப்படுவதால் ஏற்படும் வேலையிழப்புகளால் பல குடும்பங்களின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளன. நிரந்தரமற்ற வேலை, நிச்சயமற்ற ஊதியம், அதிகரிக்கும் கடன்சுமை – இவற்றின் காரணங்களால் அந்த நகரங்களில் வாழும் பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் விதமாக The News Minute இணையப் பத்திரிகையில் தரணி தங்கவேலு எனும் இளம் பத்திரிகையாளர் சென்ற வாரம் எழுதிய கட்டுரை முக்கியமானது.
CAA-NRCயை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஜனநாயக முறையில் அமைதியாகப் போராட்டம் செய்துவந்த இஸ்லாமியப் பெண்களைப் பற்றி துணை நிதியமைச்சர் அனுராக் தாகூர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் அவ்வளவு அவதூறாகப் பேசினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாகப் போராட்டம் செய்துவந்த பெண்கள்மீது காவல் துறையினர் தாக்குதல்களை நடத்தினர். இந்திய நாட்டின் ஆன்மாவான மதச்சார்பின்மை – பன்முகத்தன்மையைக் காக்க, தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாகப் போராடிய பெண்கள்மீது அரசு இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை எங்குபோய் முடிந்தது என்பதை சென்ற வாரம் பார்த்தோம்.
ஆணவக் கொலைகள், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அவமானம், கருமுட்டையை விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் அவலநிலை, அரசியல் சாசனத்தை மதிக்காத அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடுவது – ‘மகளிர் தினத்தை ஒட்டி கட்டுரை ஏதேனும் எழுதப்போகிறாயா?’ என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கேட்டபோது உடனே என் நினைவுக்கு வந்தவை சமீபத்தில் என்னை பாதித்த இந்த நான்கு விஷயங்கள்தான். பிற்போக்குத்தனம் புரையோடிப்போயுள்ள நம் சமுதாயத்தின் தளைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, சுதந்திரமாகவும் சுயமரியாதையோடும் வாழ்வதற்குப் பெண்கள் எவ்வளவு போராட வேண்டியுள்ளது; எவ்வளவு இழக்க வேண்டியுள்ளது!
**பெண் பிள்ளைகள்மீது நடத்தப்படும் கொடுமைகள்**
பெண் குழந்தைகள் மீது இன்றும் பல்வேறு வன்முறைகளும் உரிமை மீறல்களும் நடத்தப்படுகின்றன. 2018 செப்டம்பர் மாதம் தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights – NCPCR) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாட்டில் நடக்கும் மொத்தத் திருமணங்களில் குழந்தைத் திருமணங்களின் பங்கு 2005-06ஆம் ஆண்டு 26.5 ஆக இருந்தது; அது 2015-16இல் 11.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. 12 மாநிலங்களில் இதன் பங்கு தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது என்பது கவலையளிக்கிறது.
15-19 வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் போக்கு ஊரகப்பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களிலும் பெண் குழந்தைத் திருமணம் என்பது பரவலாகவே உள்ளது. இந்தியாவின் பெரிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், இதில் ஹரியானாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழகமே. முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட 37 விழுக்காடு நகரங்களில்தான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த அவலத்தைப்பற்றி போதிய ஆதாரங்கள் திரட்டுவதற்காக தமிழக அரசின் சமூகநலத் துறை, UNICEF மற்றும் Indian Council for Child Welfare எனும் நிறுவனங்களோடு இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 2018 டிசம்பர் மாதம் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள் பொதுவெளியில் வைக்கப்பட்டன.
பெண் பிள்ளைகள் காதலில் இருப்பதாகத் தெரிந்தவுடன் அதைத் தடுப்பதற்காகவே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாகப் பெரும்பான்மையான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல நடத்தப்படும் குழந்தைத் திருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைப் பெறுவது அவசியம் என்று கருதும் பெற்றோர்களின் பங்கு 50 விழுக்காட்டுக்கும் குறைவு.
பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாகப் பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் திருமண வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாகத் தெரிவித்த பெற்றோர்களின் பங்கும் அதிகம். சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்து தளங்களிலும் பாலினப் பாகுபாடுகளைப் இளம்வயதிலிருந்தே அன்றாடம் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
**குடும்பக் கட்டுப்பாட்டில் சமமற்ற சுமைப்பகிர்வு**
1970களின் பிற்பாதியில் இருந்தே தென்மாநிலங்கள் தங்களுடைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெரும் வெற்றியையும் பெற்றுள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டின் பயன்கள் குறித்து அரசு மேற்கொண்ட தொடர் பரப்புரைகள், பெண் கல்வி போன்ற முன்னேற்றங்களால் அந்த இலக்கை தென்மாநிலங்கள் அடைய முடிந்தது. இதன் விளைவாக, இங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் (15 வயது – 44 வயது) இருக்கும் பெண்களின் கருவள விகிதம் (Fertility rate) 2.1க்கும் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 1.6 ஆக இருக்கிறது.
ஓர் இலக்கை அடைவது எவ்வளவு முக்கியமோ, அந்த இலக்கை எவ்வாறு அடைகிறோம் என்பதும் அதே அளவுக்கு முக்கியம். மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சிறிய குடும்பங்களை நோக்கி நகர வேண்டும். அந்தப் பொறுப்பை முழுவதுமாகப் பெண்கள்தான் சுமந்தார்கள் என்றால் அது மிகையாக இருக்காது.
பொருளாதார வளர்ச்சி, நகரமயமாதல், பெண்களுக்கும் அதிகாரத்தில் பங்களித்தல் எனப் பல நேர்மறையான கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும், குடும்பக் கட்டுப்பாட்டின் பொறுப்பை ஏற்க பெரும்பான்மையான ஆண்கள் மறுக்கிறார்கள் என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நவீன கருத்தடைக் கருவிகள்/முறைகளின் பயன்பாடு 2012-13இல் 60 விழுக்காடாக இருந்ததாகவும், அது 2015-16இல் 53 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் NFHS எனப்படும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் சமீபத்திய ஆய்வுச்சுற்று தெரிவிக்கிறது. மேலும், நவீன கருத்தடை முறைகளில், பெண்கள் செய்து கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையே 93 விழுக்காடு பங்குவகிக்கிறது. இந்தத் தகவல், மேற்கூறிய வாதத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.
15-49 வயது ஆண்களில் 33 விழுக்காடு (மூன்றில் ஒரு பங்கு) ஆண்கள், குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களின் பொறுப்பு, ஆண்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றனர். நம்முடைய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மையும், பாலின இடைவெளியும் (Gender Gap) பரவலாக இருக்கிறது என்பதற்கான குறியீடாக இதை நாம் வைத்துக்கொள்ளலாம்.
**பொருளாதாரத்தில் பாலினப் பாகுபாடுகள்**
உலக நாடுகளில் ஆண்களும் பெண்களும் தங்கள் நேரத்தை எந்தெந்த வேலைகளுக்குச் செலவிடுகின்றனர் எனும் ஆய்வு ஒன்றை Organization for Economic Cooperation and Development (OECD) எனப்படும் 36 உலக நாடுகளின் அரசுகள் உறுப்பினர்களாக இருக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு நிறுவனம் 2014ஆம் ஆண்டில் மேற்கொண்டது. அந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தந்த அதிர்ச்சிகரமான தகவல்களில் மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக இருந்தது இந்தியாவில் நிலவும் நிலவரம் குறித்தது.
இந்தியப் பெண்கள் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 35 மணி நேரம் வீட்டுவேலை பார்ப்பதாகவும், ஆண்கள் ஒரு வாரத்தில் வெறும் 2 மணி நேரமே வீட்டுவேலை பார்ப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, இந்த ஆய்வில் இடம் பெற்ற 24 நாடுகளில் வாழும் பெண்களில் இந்தியாவில் வாழும் பெண்கள்தான் அதிக நேரம் வீட்டுவேலையில் ஈடுபடுவதும் தெரியவருகிறது. காலங்காலமாக தாய்க்குலத்தைத் தியாகத்தின் திருவுருவமாகப் போற்றி, வீட்டுக்குள் அடைத்துவைத்து அவர்களைப் பாதுகாத்த ஆணாதிக்க சமுதாயம் ஆயிற்றே!
இந்தியாவின் உழைப்புப் படையில் (Labour force) பெண்களின் பங்கு குறைவாக உள்ளது எனப் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization – ILO) தரவுகள் கூறுகின்றன. உழைக்கும் வயதில் உள்ள பெண்களில், 27 விழுக்காடு பெண்களே உழைப்புப் படையில் பங்கேற்று வேலை பார்க்கவோ அல்லது வேலை தேடவோ செய்கிறார்கள். வேலை என்பது பெரும்பான்மையான பெண்கள் நாள்தோறும் பார்க்கும் வீட்டுவேலைகளைக் கணக்கில் கொள்வதே இல்லை.
ஒருவர் வேலை செய்து ஊதியம் பெற்றால்தான் தேச மொத்த உற்பத்தி மதிப்பின் (GDP) வளர்ச்சிக்குப் பங்களிப்பதாகவும், பொருளாதாரத்துக்குப் பயனுள்ளவராகவும் கருதப்படுவார். வீட்டுவேலையை ஒரு வேலை என்றே இந்த தேசம் மதிக்காதபோது அவற்றைச் செய்யும் பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் ஏது? நாட்டின் பொருளாதார இயந்திரம் தங்குதடையின்றி இயங்குவதை உறுதிசெய்வது பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளே. இதை அங்கீகரிப்பதோடு நிறுத்திவிடாமல், பெண்களுக்குச் சமமான பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், வீட்டு வேலைகளை ஆண்கள் தாங்களாகவே முன்வந்து செய்ய வேண்டும் என்பதையும் இந்த சமுதாயம் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலையை நோக்கி நகரத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வது அவசியம்.
ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தன்று பெண்களுக்கு வாழ்த்து சொல்வதால் ஆணாதிக்க மனப்பான்மை மாறிவிடாது. விமர்சனம், சுயவிமர்சனம் இவ்விரண்டுக்கும் தயாராக இருப்பவர்களாக, ஆணாதிக்க மனப்பான்மையைத் தகர்க்கும் பெண்களின் போராட்டங்களில் அவர்களுக்குத் துணையாகத் தோளோடு தோள் நிற்கும் ‘தோழர்’களாக ஆண்கள் மாறத் தொடங்குவது, மகளிர் தின வாழ்த்து சொல்வதற்கு அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய முதல் தகுதி.
**கட்டுரையாளர் குறிப்பு**
நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com�,