பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாத காலமாக அயல்நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (நவம்பர் 28) மாலை ஐந்து மணிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அறிக்கை வாசித்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே டெல்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்து கைதான மதிமுக பொதுச் செயலாளர் தாமதமாகத்தான் நேற்று நாடாளுமன்றம் சென்றார்.
அப்போதுதான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் பிரதமரின் அறிக்கை பற்றி அறிக்கை வாசிக்க ஆரம்பித்தார்.
அப்போது பேசிய வைகோ, “ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்து, மன்மோகன்சிங் காலம் வரையிலும், பிரதமர் அயல்நாடுகள் சென்று வந்தால், அதுகுறித்து, அவரே மாநிலங்கள் அவைக்கு வந்து விளக்கம் அளிப்பார். உறுப்பினர்கள் அதன்மீது விளக்கம் கேட்பார்கள். இதுதான் இத்தனை ஆண்டுக்காலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை ஆகும். ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடி உலகம் சுற்றி வருகின்றார். பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோரோடு பேசுகிறார். மகிழ்ச்சி. ஆனால், அதுகுறித்து அவர் இந்த அவைக்கு வந்து விளக்கம் அளிக்காதது ஏன்? அயல்நாட்டுத் தலைவர்களோடு நான் என்ன பேசினேன்? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? என்பதை, அவர் இந்த அவைக்கு வந்து தெரிவிக்காதது ஏன்?
வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர் , அத்துறையில் பாண்டித்யம் பெற்றவர்தான். ஆனால், பிரதமர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யக் கூடாது. ஜெய்சங்கர் பிரதமரானால், அவர் வாசிக்கலாம்” என்றார் வைகோ.
மேலும் அவர், “வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவர்களே, இலங்கைக்குச் சென்றீர்களே. அங்கே அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகளும் தப்பவில்லை. சிங்களவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் நான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்து விட்டார். துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தமிழர் வாழும் தெருக்களில் சுற்றி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஈழத்தமிழ் இனப்படுகொலையால், கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயும், கோபத் தீயும் பற்றி எரிகின்றது. அப்படி எரிகின்ற நெருப்பில், நீங்கள் இப்போது பெட்ரோலை ஊற்றி இருக்கின்றீர்கள்” என்று பேச, அவைத் தலைவர், “ இப்படி நீங்கள் பேசக்கூடாது” என்றார்.
வைகோவோ, “நான் பேசுவேன்” என்று கூற அவைத் தலைவருக்கும் வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்,
”நான் இலங்கைக்குச் சென்று அதிபரைச் சந்தித்தது குறித்து வைகோ கேட்கின்றார். நான் மொத்த இலங்கைக்கும்தான் அதிபர் என்று அவர் கூறி இருக்கின்றார். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருதித்தான் நாங்கள் செயல்படுவோம்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, “உங்கள் அழைப்பில்தான் அவர் வருகின்றாரா?” என்று கேட்க, “ ஆமாம். நான் அவரை அழைத்திருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.�,