தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேர பாதிப்பு நிலவரத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் இன்று 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 93 பேரையும் சேர்த்து மொத்தம் 805 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று 11,835 பேர் உட்பட 4.21லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 407 பேர் உட்பட மொத்தம் 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 7 பேர் உட்பட மொத்தம் 118 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு சென்னையில் 11,131 பேர் உட்பட 17,082 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்துக்கு வந்த 726 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்துக்கு ஒருநாளுக்கு 25 விமானங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று 11 விமானங்கள் மூலம் 486 பேர் வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 14 விமானங்கள் மூலம் 1,211 பேர் சென்றுள்ளனர். விமானத்தில் வருபவர்களின் கையில் ஸ்டாம்பிங் வைக்கப்படுகிறது. அவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமலும்,12 சதவீதம் பேருக்கு அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அறிகுறிகள் தென்பட்ட நபர்களில் 40 சதவீத பேருக்குக் காய்ச்சல், 37 சதவீத பேருக்கு இருமல், 10 சதவீத பேருக்குத் தொண்டை வலி, 9 சதவீத பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் 4 சதவீத பேருக்குச் சளி இருந்ததால் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதுபோன்று உயிரிழந்த 118 பேர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 84 சதவீதம் பேருக்குச் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றோடு, கொரோனா தாக்கமும் இருந்தது. வெறும் 16 சதவீத நபர்களுக்கு மட்டுமே நோய்கள் ஏதுமின்றி, கொரோனா தாக்கத்திற்குப் பிறகு இறப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 50 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் வீட்டிலேயே அவர்களது குடும்பத்தினர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் நாம் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம் என்பதைக் கேட்டறிந்து அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
**-கவிபிரியா**�,