மதுரையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் நேற்று (டிசம்பர் 22) சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மதுரை எம்.பி வெங்கடேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வைகுண்டர் தலைமை பதி பாலபிரஜாபதி அடிகளார் மற்றும் ஆயர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர். கிறிஸ்துப் பிறப்பைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குடிலை திறந்துவைத்த ஸ்டாலின், கேக்கை வெட்டி அருகிலிருந்தவர்களுக்கு ஊட்டினார்.
விழாவில் ஸ்டாலின் பேசும்போது, “இனிகோ இருதயராஜ் வருடம் தவறாமல் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி வருகிறார். கலைஞரைத் தொடர்ந்து நானும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். இது கிறிஸ்துமஸ் விழாவா அல்லது கிறிஸ்துமஸ் பெருவிழாவின் ஒரு மாநாடா என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள மட்டும் இங்கு நான் வரவில்லை. நாளை நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள உங்களது வாழ்த்துகளைப் பெறுவதற்காகவும் வந்துள்ளேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இனிகோ இருதயராஜிற்கு திமுக சார்பில் நன்றி” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “வழக்கமாக கிறிஸ்துமஸ் விழா என்றுதான் அழைப்பிதழில் போடுவார்கள். ஆனால் இங்கு சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்பது பல்வேறு மதத்தவர்கள் வாழும் நாடாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அனைத்து மதங்களும் மக்களுக்கு அன்பைதான் போதிக்கிறது. இந்தியாவில் நாம் சமத்துவ சமுதாயமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,
“நமது ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் நாட்டில் நடக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறுவதே சமூகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது தேச துரோகமாகப் பார்க்கப்படுகிறது. மதம் பார்த்து இரக்கப்படு என்பதுதான் தேசபக்தி என்கிறார்கள். மிக மோசமான இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
ஓர் உருப்படியான திட்டத்தையாவது மத்திய அரசு கொண்டுவந்ததா எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்லியிருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்துள்ளதால் சட்டத்தை எதிர்க்கிறோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்க்காததற்கு என்ன காரணம்? இதுதான் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டும்” என்று பேசினார்.�,