கொள்முதல் தாமதம்: மழையில் நனையும் நெல்மூட்டைகள்!

Published On:

| By Balaji

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் துவங்கி அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் முழுமையாக உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால் கொள்முதல் நிலைய வாயில்களில் சுமார் 5000 ம் முதல் 10000ம் வரையிலான மூட்டைகள் நெல் குவியல்களாக குவிந்து கிடக்கிறது. தென் மேற்கு பருவ மழை துவங்கி பெய்து வருவதால் அதன் தாக்கத்தால் காவிரி டெல்டாவிலும் இரவு நேரங்களில் ஆங்காங்கு கோடை மழை பெய்து நனைந்து விடுகிறது.

இந்த நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் தென்பரை, இராதாநரசிம்மபுரம், உள்ளிட்ட கிராமங்களுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று (ஜூலை 5) நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “கொரோனா, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கிடையே விவசாயிகள் சிரமப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் நனைவதைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். இப்பாதிப்புகளுக்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்திட முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

முடிந்த வரையில் குறுவை காலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், இருப்பு கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு வழங்குவதற்கான நடைமுறையை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டிய பாண்டியன்,

“தற்போது நாள் 1க்கு காலை 9 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை 1000 ம் சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய இணையதளம் மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மின்சார தட்டுப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகளால் உரிய நேரத்தில் துவங்கி முடிக்க முடியாமல் 500 முதல் 600 சிப்பங்கள் மட்டுமே பெரும்பான்மையான இடங்களில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.

தற்போது இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்று வருவதால் ஓரிரு வாரங்களில் நடைபெற வேண்டிய அறுவடைப் பணிகள் ஒரிரு நாட்களில் முடிவடைந்து விடுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு நாள் 1க்கு 2000 சிப்பங்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து கால நிர்ணயமின்றி இணையதள செயல்பாடுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொள்முதல் நிலையங்களில் ஊழல் முறைகேடுகளை களைய விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக்குழுக்களை ஏற்ப்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share