ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக் காலத் தடை நேற்றோடு முடிந்துவிட்ட நிலையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வராத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.
ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நின்ற திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக முடிவு அறிவிக்கப்பட்டது. தபால் ஓட்டு எண்ணிக்கையிலும், கடைசி ரவுண்டு ஓட்டு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறிய அப்பாவு இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குத் தொடுத்தார்.
தேர்தல் வழக்குகளில் அதிசயமாக இவ்வழக்கில் தபால் ஓட்டுகள், மற்றும் இறுதி ரவுண்டுகளாக 19,. 20, 21 ஆகிய சுற்றுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை இன்பதுரை சென்றும் மறு வாக்கு எண்ணிக்கையைத் தடுக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23 ஆம் தேதி வரை தடை விதித்தது.
நேற்றோடு உச்ச நீதிமன்றத்தின் தடைக் காலம் முடிவு அடைந்ததால் வழக்கு நேற்றே விசாரணைக்கு வரும் என்று இரு தரப்பினரும் காத்திருந்தனர். ஆனால் இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் ஆகிய இருவரும் நில கையகப்படுத்தும் சட்டம் தொடர்பான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று அவ்வழக்கை விசாரித்ததால் , ராதாபுரம் வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை.
இந்நிலையில் அப்பாவு தரப்பு இன்று (அக்டோபர் 24) மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்த தடை முடிந்துவிட்டதையடுத்து, வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு இன்று மென்ஷன் செய்திருக்கிறது. இதை ஒட்டி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
முடிவு தெரியாமல் டெல்லியை விட்டு திரும்பக் கூடாது என்று அப்பாவுவும், இன்பதுரையும் அங்கேயே முகாமிட்டிருக்கிறார்கள்.
�,