Qகோமா நிலையில் பிரணாப் முகர்ஜி

Published On:

| By Balaji

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டாலும், வயது முதிர்வு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் அவருடைய முக்கிய உடல் உறுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை நிலையாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பிரணாப்முகர்ஜி இறந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. ட்விட்டரிலும் #ripPranabMukherjee என்ற ஹேஷ்டேக்  காலை முதல் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் அவரது மகன் அபிஜித் முகர்ஜி, என் தந்தை உயிருடன்  இருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் கூட தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். தந்தை உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி

எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று எனது தந்தை பாரத ரத்னா விருதை பெற்றார். ஓராண்டு கழித்து தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மை அல்ல. மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்களுக்காக காத்திருக்கிறேன். எனவே, மீடியாக்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share