இந்தியாவில் இன்றைய இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்புக்கான வேலைக்குச் செல்கிறார்களா என்று கேட்டால் அதற்கு விடை கேள்விக்குறிதான். குடும்ப சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகவும், படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாயா என்று மற்றவர்களின் கேலிக்காகவும் குறைந்த ஊதியத்தில் கிடைத்த வேலையைச் செய்து வரும் இன்றைய இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம்.
முன்பெல்லாம் கிடைத்த வேலை என்றால், பி.இ., பி.டெக்., பிஜி என பட்டம் பெற்றிருக்கும் இளைஞர்கள் பிபிஓ, கேபிஓ எனக் குறைந்த பட்ச ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்குச் சென்றனர். ஆனால் அந்த நிலையும் மாறி தற்போது துப்புரவுத் தொழிலாளிகள், பார்க்கிங் உதவியாளர் என எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானதாக இருக்கும் வேலைகளையும் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் எந்த வேலையும் சளைத்ததல்ல என்ற எண்ணத்துடன், துப்புரவு வேலையைச் செய்து வருகிறார்கள் கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வயது 23. மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்ற இவர், கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் தனது முதல் நாள் பணியை நேற்று (மார்ச் 9) தொடங்கினார்.
இதுகுறித்து சங்கீதா தி இந்து நாளிதழிடம் கூறுகையில், “ஒரு நாளும் சாலையைப் பெருக்குவேன் என்று நான் நினைத்ததில்லை. திங்கள் கிழமை காலை ராஜா தெருவில் எனது பணியைத் தொடங்கினேன். இந்த பணி முதலில் எனக்குக் கடினமாக இருந்தது. அனைவரது கண்களும் என்னைப் பார்ப்பதாகவே உணர்ந்தேன். அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டு இந்த பணியைத் தொடர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ள சங்கீதா, “என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். துப்புரவுத் தொழிலாளியாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடாது. சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதற்கான முதல் படியாக இதைக் கருதுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
சங்கீதாவைப் போன்று, பத்மாவதி (35) என்ற பெண் நேற்று துப்புரவுப் பணியில் ஈடுபட்டார். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த பத்மாவதி, அங்குக் கிடைக்கும் ஊதியத்தை விடத் துப்புரவு பணியில் அதிக ஊதியம் கிடைப்பதால், கணக்காளர் பணியை விட்டுவிட்டு இப்பணியில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், இந்த வேலைக்குத் தொடக்கத்திலேயே ரூ.17.500 கிடைக்கிறது. அதைவிட பென்சன் மற்றும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வும் கிடைக்கிறது. வேலை நேரமும் குறைவு. இதனால் விரைவாக வீட்டுக்குச் சென்று என் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறேன் என்றார்.
இதுபோன்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற பலர் துப்புரவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஊழியர்களில் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கும் நவீன் தனியார் நிறுவனத்தில் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், ”எனது குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் இந்த வேலையில் சேர்ந்தேன். இதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து எனது சகோதரியையும், அம்மாவையும் கவனித்துக்கொள்வேன். இந்த அரசு வேலைக்காகத் தனியார் நிறுவனத்தில் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்தேன். முதல் நாள் வேலையாக குப்பைகள் தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் தான் போட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் பணி எனக்கு வழங்கப்பட்டது. இந்த பணியைச் சிறப்பாகச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 13 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் துப்புரவு பணியில் சேர்ந்தது குறித்துக் கூறுகையில், பல போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றது இந்த வேலையை மேற்கொள்ளச் செய்தது என்றார்.
குறிப்பிட்ட சமூகத்துக்குத்தான் இந்த பணி கொடுக்க வேண்டும் என்று இத்தனை காலமாக இருந்து வந்த ஒரு பாகுபாடு தற்போது உடைக்கப்பட்டிருப்பதற்கும், அந்த சமூகத்துடன் சேர்ந்த தற்போது பணியாற்றுவதாலும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி அடைவதாக இவர்கள் கூறுகின்றனர்.
எஸ்சி சமூகத்தை அல்லாமல் மற்ற சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் துப்புரவு பணியில் சேர்ந்தது குறித்து, மாநில அளவிலான எஸ்சி நலக் குழுவின் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கூறுகையில், ”இது சமூக சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு படி” என்று கூறியுள்ளார்.
மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ரோஸ்ட்டர் முறையில் இந்த பணி நியமனம் செய்யப்பட்டது” என்றார். ஆனால், கல்லூரித் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில் பார்க்கிங் உதவியாளர் பணிக்குப் பட்டதாரி இளைஞர்களே பெரும்பாலும் விண்ணப்பித்து பணியில் சேர்ந்தனர். 1400 பேர் இந்த பணிக்கு விண்ணப்பித்த நிலையில் இதில் 70 சதவிகிதம் பேர் பட்டதாரி இளைஞர்களும், குறிப்பாக 50 சதவிகிதம் பேர் பொறியியல் படிப்பை முடித்தவர்களுமே விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், தமிழகத்தில் எந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இருக்கிறது என்பதை இந்த இளைஞர்கள் உணர்த்தியுள்ளனர்.
**கவிபிரியா**
�,”