டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் இன்றும் (மார்ச் 4) முடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். டெல்லி வன்முறையைத் தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் வெளியேவும் காந்தி சிலை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் அவை கூடியதும், மாநிலங்களவையில் சமாஜ் வாதி கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் டெல்லி வன்முறையை வலியுறுத்தி அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று டெல்லி வன்முறை குறித்தும், அமித் ஷா பதவி விலக வலியுறுத்தியும், மக்களவையிலும் எம்.பி,க்கள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் அவை மதியம்12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பின்னர் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்றாவது நாளாக அவையின் அலுவல் நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில் நாடாளுமன்றம் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”டெல்லி வன்முறை குறித்து அவையில் அரசு ஆலோசிக்க வேண்டும் “ என்று ஏ.என்.ஐ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க மக்களவை எம்.பிக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
**கவிபிரியா**�,