தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் காலமானதையடுத்து நேற்று இரவு வரை அவரது அம்மாப்பாளையம் வீட்டில்தான் இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின் தனது சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்துக்குத் திரும்பினார்.
நாள் முழுதும் பலரையும் சந்தித்ததிலும் சரியாக சாப்பிடாததாலும் களைப்படைந்த முதல்வர் தனது நெடுஞ்சாலை நகர் இல்லத்துக்குத் திரும்பிக் குளித்துவிட்டு ஓய்வெடுக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில்தான் சென்னையிலிருந்து உயரதிகாரிகள் வந்திருக்கிற தகவல் முதல்வருக்கு சொல்லப்பட்டது. கேஷுவல் உடைக்கு மாறிவிட்ட முதல்வர், மிகவும் களைப்பாக இருந்ததால் காலையில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஆனபோதும் முதல்வர் வீட்டில் அப்போதும் சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்கள், முதல்வரின் சில நண்பர்கள் இருந்தனர். அவர்களோடு முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேச்சு வந்தது.
அக்டோபர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்பது, சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் என உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன. இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க 4 வாரம் அவகாசம் கோரியிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இதுபற்றி பேச்சு வந்திருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை அவசரப்பட்டு மழையில நடத்தணுமாண்ணே என்று ஒரு நிர்வாகி கேட்க, ‘எல்லாத்தையும் பாத்துட்டுதான் முடிவு பண்ணனும். என்னையப் பொறுத்தவரைக்கும் அதிமுகவுலேர்ந்து பிரிஞ்சு போன அமமுக காரங்கள்ல சில பேரு திமுகவுக்கு போயிட்டாங்க. செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன்னு ஒரு சிலர் அங்க போனாலும் மத்தவங்க இன்னும் திமுக பக்கம் போகலை. அவங்க கட்சி அதிமுகதானே… அப்புறம் ஏன் அவங்க திமுக அது இதுனு வேற கட்சிக்குப் போகணும்? அமமுகவுல இருக்கிறவங்கள்லாம் அதிமுகவுக்குதான் வரணும்.இதுதான் அவங்க கட்சி. அவங்க எல்லாரும் இங்க வந்த பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தறதுனு இருக்கேன்.
சசிகலா தரப்புல நம்மகிட்ட பேசிக்கிட்டுதான் இருக்காங்க. அவங்களுக்கும் இரட்டை இலைதான் முக்கியம். அம்மாவோட சின்னத்தை விட்டு அவங்க எங்கயும் போகமாட்டாங்க. அவங்க சொன்னபடி எல்லாரும் ஒன்னா சேர்ந்தபிறகுதான் இடைத்தேர்தலை நடத்த முடியும்” என்று கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
உள்ளாட்சித் தேர்தலில் சில நூறு ஓட்டுகளும், சில பத்து ஓட்டுகளும், ஏன் ஒரு சில ஓட்டுகள் கூட வெற்றியைத் தீர்மானிக்கும். இந்த விஷயத்தில் பழைய பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதே அதிமுகவுக்கு நல்லது என்று நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான் கட்சிகளை இணைத்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் என்று தெளிவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சேலத்து அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்.�,