இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எரிபொருள், உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் வாங்க இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் நிதி உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க இலங்கை அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
உலக நாடுகளிடமும், உலக அமைப்புகளிடமும் நிதி உதவியைக் கோரி வருகிறது இலங்கை. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோரியுள்ளது ஆனால் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இதுவரை எந்த நிதி உதவியும் வழங்கவில்லை. இந்நிலையில், இந்தியா இதுவரை இலங்கைக்கு எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிதியுதவியாக 27 கோடி ரூபாயை கடனுதவியாக அளித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசின் மின் விநியோக அமைப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நீங்கள் பதாகைகளை பிடித்து போராட்டங்கள் நடத்தலாம் ஆனால் இந்த போராட்டங்கள் இலங்கையின் நிலையை இன்னும் மோசமடைய வைக்குமே தவிர இதனால் நமது பொருளாதாரம் மீள வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால், இந்தியாவிடம் இருந்து நிதியுதவி கேளுங்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். இந்தியாவிடமிருந்து நாம் வாங்கும் கடனின் அளவு அதன் எல்லையை நெருங்கி விட்டது. ஆகையால் முதலில் நமக்கு நாமே உதவிகள் செய்து கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
.