தொடர்மழை: இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு – சிவப்பு, நீல எச்சரிக்கை எதற்கு?

Published On:

| By Balaji

கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மிக மோசமான வானிலையுடன் கனமழை முதல் மிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகளுக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கண்ணூர், திருச்சூர், மலப்புரம் உட்பட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக முல்லை பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2,403 அடியாகும். இந்த நிலையில் தற்போதைய நீர்மட்டம் 2,390.88 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 2,300 அடியை தாண்டினால் முதல்கட்டமாக நீல எச்சரிக்கை விடுவது வழக்கம். இதன்படி, தற்போது நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 அடி மேலும் உயர்ந்தால் ஆரஞ்சு எச்சரிக்கையும், 4 அடி உயர்ந்தால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை.

பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக மோசமான வானிலையுடன் கனமழை முதல் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share