சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை பின்பற்றவில்லை என்றால் கொரோனா பாதிப்புள்ள ஒருவரால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய்த்தொற்று பரவும் என்று இந்திய மருத்துவ கழகம் கூறியதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மேலும் 354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421ஆக இருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைப் பொதுமக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், இதுகுறித்து கூறுகையில், ஒருவர் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றால் அவரிடமிருந்து 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்ததாகக் கூறியுள்ளார். மருத்துவ மொழியில் இந்த நிகழ்வுக்குப் பெயர் R0( R-naught). R0 என்பது இனப்பெருக்கத்தின் தொடக்கநிலை எண் ஆகும். இதனை அளவீடாகக் கொண்டு தொற்று எந்த அளவிற்குப் பரவிப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது என்று நிறுவுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் லாவ் அகர்வால்.
மேலும், இந்திய ரயில்வே மொத்தம் 133 இடங்களில் 2500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகளைத் தயார் செய்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,