�பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

Published On:

| By admin

பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று (ஏப்ரல் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது கால்வாய்க்கு உள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.
அதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது எனவும் பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது, நகரமும் அழகாகும். அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது என நீதிபதி கூறினார்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை நீதிபதி இன்றைக்குத் தள்ளிவைத்தார்.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel