கடையடைப்பு தொடர்பாக வணிகர்களிடம் கருத்து கேட்க வேண்டும்!

Published On:

| By Balaji

‘ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும்போதும், கடை திறக்கும் நேரத்தை குறைக்கும்போதும் அதற்கு முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும்’ என்று தமிழக அரசை விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னையில் வணிகர் பேரமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வணிகர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கடந்த ஏழு மாதங்களாகத்தான் கடைகள் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினார்கள். இதில் நிறைய வியாபாரிகள் இன்னும் கடனில்தான் தத்தளிக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் கொரோனா இரண்டாவது அலையை காரணமாக வைத்து மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய கடைகள், மால்கள், தியேட்டர்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகர்கள் எப்போதும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றிதான் வியாபாரம் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது விதிமுறைகளுக்கு முரணாக அதிகாரிகள் அத்துமீறி அபராதம் விதிக்கிறார்கள். ரூ.25,000 வரை அபராதம் விதிப்பது மட்டுமின்றி கடைகளை பூட்டி சாவியையும் எடுத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டவர்,

மேலும், “எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும்பட்சத்தில் இதே அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்தால் அந்தந்த துறை சார்ந்த அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அரசு கடைகளை மூட உத்தரவிடும்போது அந்தக் கடைக்காரர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அவர்களுக்கு அரசு நிவாரணமும் கொடுப்பதில்லை. எனவே பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய நிவாரணங்கள், சலுகைகள், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும்.

ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும்போதும், கடை திறக்கும் நேரத்தைக் குறைக்கும்போதும் அதற்கு முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும். வணிகர்களிடம் கருத்து கேட்காமலேயே கடைகளை அடைக்க உத்தரவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியவர்,

தொடர்ந்து “50 சதவிகித வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்ய வியாபாரிகள் தயாராக இருக்கும்போது அரசு ஏன் பாரபட்சம் காட்டுகிறது? சில கடைகளை திறக்க அரசு அனுமதிக்கிறது. சில கடைகளை திறக்க கூடாது என்கிறார்கள். அவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்?

இரவு 7 மணிக்கு மேல்தான் தள்ளுவண்டியில் டிபன் கடை நடக்கிறது. நடைபாதையில் பூ விற்கும் பெண்கள் மாலை 5 மணிக்கு தான் வியாபாரத்தை தொடங்குவார்கள். இப்போது அவர்களெல்லாம் வருமானம் இன்றி அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை உள்ளது. சலூன் கடைக்காரர்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது. எனவே அரசு பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share