பிரபல இசைக்குழுவான லக்ஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளது.
லக்ஷ்மன், ராமன் ஆகிய இசைச் சகோதரர்கள் இணைந்து நடத்தி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி என்னும் இசைக்குழு மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனம் முன்னணி இசைக்கலைஞர்களுடன் உலகம் முழுவதும் பல்வேறு இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தது. இதன் உரிமையாளர்களுள் ஒருவரான ராமன், அசோக் நகரில் இருக்கும் வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் அவர் நேற்று(டிசம்பர் 24) கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய ராமன், தனது அறைக்கு சென்றுள்ளார். நெடுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் தூக்குமாட்டியபடி இருந்த அவரைக்கண்ட வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து வெகுநேரமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல், உடற்கூராய்வு பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக சர்க்கரை நோய், இருதய அடைப்பு போன்ற பல நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது மரணத்திற்குப் பின் பிற காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது மரணத்திற்கு பல்வேறு திரைத்துறையினர் மற்றும் இசைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
�,