x
டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021க்கான இரண்டு நெட் தேர்வுகளும் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இது ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும். இத்தேர்வு கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதற்கும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பதிவு செய்வதற்கும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதித் தேர்வாக உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 ஆண்டுக்கான இரண்டு நெட் தேர்வுகளும் ஒரேகட்டமாக நடத்தப்படும். விருப்பமுள்ள தேர்வர்கள் செப்டம்பர் 5 வரை [இணையதளம்](https://ugcnet.nta.nic.in) மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 6ஆம் தேதி கடைசியாகும். செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதிவரை தேவைப்படுவோர் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
நெட் தேர்வுகள் அக்டோபர் 6 முதல் 11 ஆம் தேதி வரை காலை 9-12 வரையிலும் பிற்பகலில் 3-6 வரையிலும் என இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். இத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,