நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் அரசு கடன் வாங்கலாமா?

public

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு எவ்வகைத் திட்டமிடலும், முன்தயாரிப்பும் இன்றி எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.

தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் முடங்கும்; அது மக்கள் வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்களை மட்டுப்படுத்த அரசு பொருளாதார நிவாரணங்களை அறிவித்தது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, முடக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது எப்படி என்பது பற்றி எந்த தெளிவும் இல்லை. இது ஒரு விநோதமான, சங்கடமான நிலையாக இருக்கிறது.

தற்போது கவனம் எல்லாம் முறைசாராத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து பணிபுரியும் பாட்டாளி மக்கள், விளிம்புநிலையில் வாழும் மக்கள் இவர்களுக்காக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தின் தன்மை, அளவைப் பற்றி விவாதிப்பதில்தான் குவிந்திருக்கிறது. இந்த விவாதங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், அரசு பொருளாதாரத்தில் தன் பங்கைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு கடன் வாங்கி மக்கள் நலனுக்கான செலவழித்தால் பணவீக்கம் தீவிரமடையும் என்றும் காலங்காலமாகச் சொல்லி வந்தவர்களும் அந்த வாதங்களை ஓரமாக ஒதுக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1990க்கு முன்பெல்லாம் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிரப்ப அரசு, ரிசர்வ் வங்கியிடம் கடன் பத்திரங்கள் அளித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, குறைந்த வட்டிக்குக் கடன் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. ரிசர்வ் வங்கியும் அவ்வாறே செய்தது. வாங்கிய கடன் பணத்தைப் புழக்கத்தில் விடும்போது, அது பொருளாதாரத்தில் பணத்தின் அளவை அதிகரித்து பணவீக்கத்தை ஏற்படுத்தியது. காரணம், மக்கள் கையில் அதிக பணம் இருந்தும், குறைவான உற்பத்தித்திறன் காரணமாக நாட்டின் உற்பத்தி அதிகரிக்காததால், கிராக்கிக்கும் அளிப்புக்கும் பெரிய இடைவெளி இருந்தது. இதுவே பணவீக்கமாக மாறியது. அதைக் கட்டுக்குள் வைப்பது ரிசர்வ் வங்கியின் கடமை ஆயிற்றே! ஒருபுறம் அரசின் கடன் தேவைகளுக்குப் புதிய நோட்டுகளை அச்சிட்டு உதவுவது, மறுபுறம் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் பணவீக்கத்தைச் சமாளிப்பது என இரு குதிரைகளின் மேல் சவாரி செய்தது ரிசர்வ் வங்கி.

‘நிதி ஆதாரங்களைப் பொறுப்பற்ற முறையில் அரசு செலவு செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியுரிமை காவு கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால் ரிசர்வ் வங்கி தனது முக்கியப் பணியான பணப்புழக்க மேலாண்மையைச் செம்மையாகச் செய்ய முடியாது’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று 1990களின் முடிவில் நிதிக் கொள்கைக்கும் (Fiscal Policy) பணக்கொள்கைக்கும் (Monetary Policy) இடையே இருந்த பிணைப்பு துண்டிக்கப்பட்டது.

‘இனி கடன் வாங்க வேண்டும் என்றால், அரசு அதிக வட்டிக்குச் சந்தையில் அதைப் பெற்றுக்கொள்ளட்டும். அப்போதுதான் பணத்தின் அருமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை அரசு குறைத்துக்கொள்ளும்’ என்று கூறப்பட்டது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதே ஆர்பிஐ-யின் தலையாய கடமை, அதைச் செய்வதற்கு அதன் தன்னாட்சியுரிமை காக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர வேண்டும் என்றால் 1990க்கு முன்பு நடைமுறையில் இருந்த வியூகத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என்ற ஒருமித்த கருத்து உருவாகும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று என்னும் பொது சுகாதார அவசர நிலையை ஒருவழியாகச் சமாளித்து இயல்புநிலைக்கு வரும்போது, முடங்கியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் பொருட்களுக்கான கிராக்கி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். அதற்கு வேலையிழந்த கோடிக்கணக்கான மக்களிடம் தேவையான வாங்கும் திறன் இருப்பதை உறுதிசெய்ய அரசு ரிசர்வ் வங்கியின் உதவியை நாடலாம்.

கிராக்கியை உயர்த்தும் அதேவேளையில், வேலையிழந்த மக்களுக்குப் போதிய அளவில் வேலை செய்யும் வாய்ப்புகள் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட முடியும். இல்லையென்றால், அதிகரிக்கும் பொருட்களுக்கான கிராக்கியைச் சமாளிக்கும் அளவுக்குப் பொருட்களின் அளிப்பு இல்லாமல் போகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், ஒருபுறம் பணவீக்கம் தீவிரமடையும்; மறுபுறம் வாங்கும் திறன் கணிசமாகக் குறைந்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியாத நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்படுவார்கள். பொருளாதாரத்தை வழிநடத்துவதில் அரசுக்கு முக்கியப்பங்கு உண்டு என்பதை முதலில் அரசு உணர வேண்டும்; இந்த உண்மையை நிபுணர்களும் முழுமனத்துடன் அங்கீகரிக்க வேண்டும்.

**-ரகுநாத்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *