காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை தெற்கு ஆந்திரா வட தமிழ்நாடு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழையால் சென்னை தலைநகர் ஏற்கனவே அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெயில்முகம் தெரிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில்,வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வலுப்பெறாது என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து 300கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மேடவாக்கம், அம்பத்தூர், ஆவடி, முடிச்சூர், பெருங்களத்தூர்,வியாசர்பாடி, பட்டாளம், எழும்பூர்,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.
கடலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகள், அணைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,668 கன அடியிலிருந்து 4,420 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 141 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் 45,000 கன அடி நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாராபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மழைநீர் புகுந்திருந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு அங்குள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பிற்பகலுக்கு பிறகு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு, கனமழை ஓயும் வரை தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
**-வினிதா**
�,