அயோத்தி தீர்ப்பு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு!

Published On:

| By Balaji

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், அதில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் அயோத்திக்குள்ளேயே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அயோத்தி வழக்கில் மறுஆய்வுக்கு செல்ல மாட்டோம் என சன்னி வஃக்ப் வாரியம் தெரிவித்துவிட்டது. எனினும், இதற்கு தமிழகத்திலுள்ள சில அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுதொடர்பாக மவுலானா அர்ஷத் மதானி தலைமையிலான ஜமாத் உலமா ஹிந்த் அமைப்பு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், “அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு அநியாயமாகவும் ஒருதலைபட்சமாகவும் இருந்தது. அயோத்தியில் எந்தவொரு கோயிலையும் இடித்த பின்பு மசூதி கட்டப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மசூதி கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இடிக்கப்பட்டுள்ளது. தற்போது, நீதிமன்றம் அந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு என்பது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஒரு இருண்ட இடமாகவே உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் இருந்து எதிர்காலத்தில் சிறந்தவை எதையும் எதிர்பார்க்க முடியாது. மேலும் சேதத்தை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது. ஆகவே, அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மறுஆய்வுக்கு செல்ல மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி, சுப.உதயகுமரன் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். தலைவர்கள் பேசும்போது, பாபர் மசூதி இடித்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் அனுமதியின்றி கூடி உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மற்றும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆயிரம் பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share