கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 50,368 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,523 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேசமயம் நேற்று 1,739 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலியாகினர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், ஒருசில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 100க்கு மேல் உள்ளது. அதில் முதல் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் நேற்று மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,35,903 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,31,598 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் கோவை மாவட்டத்திலும் காணப்படுகிறது. அதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்றிரவு (ஆகஸ்ட் 30) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கோவை மாநகரில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிற கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை, ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி ரோடு (நேருநகர்), டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர். ரோடு, ஆரோக்கியசாமி ரோடு, சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்க்கெட் கடைகள், பீளமேடு ரொட்டிக்கடை மைதானக்கடைகள், காந்திமாநகர், ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதிநகர், பி.என்.பாளையம், ராஜவீதி, பெரிய கடைவீதி, வெரை ட்டிஹால் ரோடு, என்.எச்.வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் 1 முதல் 11 தெருக்கள், சலீவன் வீதி ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசியக் கடைகளை தவிர, மற்ற கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகள், சனி, ஞாயிறுகளில் இயங்க அனுமதி கிடையாது.
அனைத்து பூங்காக்கள், மால்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்துக் கடைகளையும் இரவு 10 மணிக்கு மூடுவதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களை இரவு 8 மணியுடன் கட்டுப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், பேக்கரிகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள உழவர் சந்தையில் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகள் இயங்க வேண்டும்.
வாரச்சந்தைகள் இயங்க அனுமதியில்லை.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்படுகிறது.
கேரளாவிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை. விடுதிகளில் தங்குபவர்கள், பணியாற்றுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
கேரளாவில் இருந்து இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வட்டாச்சியரிடம் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடந்தால் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசால் முன்னரே விதிக்கப்பட்ட, கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்தில் கூடுதலான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 1 (நாளை) முதல் நடைமுறைக்கு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**�,