ஐ.எஸ் இயக்கத் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதியை அமெரிக்காவின் சி.ஐ.ஏ(CIA) மற்றும் சிரியாவிலுள்ள குர்திஷ் படையின் எஸ்.டி.எஃப்(SDF) அணிகள் இணைந்து கொலை செய்தன. பாக்தாதி இறந்துவிட்டதை 27ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், அப்படி அறிவித்தபோது ‘குர்திஷ் படையின் செயல்பாடுகள் உதவிகரமாக இருந்ததே தவிர, மிலிட்டரி காம்பேட் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடவில்லை. அதனை முழுவதுமாக மேற்கொண்டது அமெரிக்க படைகள் தான்’ என்று கூறியிருந்தார்.
டிரம்பின் இந்த பேச்சால், பாக்தாதியை சுற்றிவளைக்க உதவிய குர்திஷ் படைகள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த அப்செட். பாக்தாதியைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட மிஷன் ‘கெய்ல் முல்லர்’ செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், சிரியாவிலிருந்த தன் படைகளை திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனால், துருக்கி நாட்டின் இராணுவம் எல்லை தாண்டி வந்து, குர்திஷ் படைகளுக்கு பிரச்சினை கொடுத்தது. சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை எதிர்த்துப் போராட, தங்களுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்த அமெரிக்கா, இப்படி பின்வாங்கிவிட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த குர்திஷ் படைகள், பாக்தாதியைக் கொல்ல உதவுவதன் மூலம் அமெரிக்காவின் நம்பிக்கையைத் திரும்பப் பெறலாம் என்று தங்களது முழு பலத்துடன் இந்த மிஷினில் இறங்கி வேலை பார்த்தன. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சினால் துணுக்குற்று, இந்த மிஷினில் தாங்கள் எந்தளவுக்கு உதவிகளை செய்தோம் என்பதை தற்போது வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர் குர்திஷ் இராணுவ அதிகாரிகள்.
குர்திஷ் SDF அமைப்பின் சிறப்பு ஆலோசகரான போலட் கேன் என்பவர், பாக்தாதியை சுற்றி வளைக்க SDF எப்படி உதவியது என்பதை, தொடர் ட்வீட்களால் வெளியுலகத்துக்கு தெரிவித்திருக்கிறார். இந்த டிவிட்டர் கணக்கு உண்மையாகவே, ‘சிறப்பு ஆலோசகரான போலட் கேன் என்பவருக்குச் சொந்தமானது தான்’ என்பதை சிஎன்என் நிறுவனம் குர்திஷ் அரசாங்கத்திடம் விசாரித்து உறுதி செய்திருக்கிறது.
தொடர் ட்வீட்களின் மூலம், போலட் கேன் சொல்லியிருப்பது…
“பாக்தாதியின் கோட்டைக்குள் அவர்களில் ஒருவராக ஒளிந்திருந்த எங்களது உளவாளி கொடுத்திருந்த தகவலின் மூலம், டெர் அல் சோர் பகுதியிலுள்ள அல் தஷிஷா ஏரியாவிலிருந்து ‘இட்லிப்’(பாக்தாதி கொல்லப்பட்ட இடம்) பகுதிக்கு பாக்தாதி இடம்பெயர்ந்துவிட்டதை நாங்கள் உறுதி செய்தோம். பாக்தாதியை கண்காணித்து பின் தொடரும் வேலையில் அமெரிக்காவின் CIA-உடன் சேர்ந்து மே 15ஆம் தேதியிலிருந்து நாங்கள் ஈடுபட்டு வந்தோம். உளவுத் தகவல்களிலிருந்து பாக்தாதி விரைவிலேயெ ஜெரப்ளஸிலுள்ள புதிய இடத்துக்கு நகரப் போவது தெரிந்தது. பாக்தாதியின் முழு திட்டங்களை அறியக்கூடிய விதத்தில் எங்கள் உளவாளி வேலை செய்ததால், அவர் அடிக்கடி தன் இடத்தை மாற்றிக்கொள்வது தெரிந்தது. எனவே, இங்கிருப்பது பாக்தாதி தான் என்பதை உறுதி செய்ய, பாக்தாதியின் இடத்துக்குச் சென்று அவரது உள்ளாடைகளை எடுத்துவந்து எங்களுக்குக் கொடுதார் எங்களது உளவாளி. அதனை சோதனை செய்து பார்த்ததில், 100 சதவிகிதம் அங்கிருப்பது பாக்தாதி தான் என்பது தெரியவந்தது. பாக்தாதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து தகவல் அனுப்பியது முதல், எங்கு வந்து இறங்கவேண்டும், எப்படி அணிவகுக்கவேண்டும் என்பது வரை அத்தனை முடிவுகளும் எங்களது உழைப்பினால் எடுக்கப்பட்டவை. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய கடைசி நிமிடம் வரை நாங்கள் இதில் ஈடுபட்டிருந்தோம். பாக்தாதி மறைந்திருந்த இட்லிப் மாகாணத்துக்குட்பட்ட பரிஷா கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு பெயர்களில் பதுங்கியிருந்தனர். ஹெலிகாப்டர்கள் வரும்போது தாக்கி அழிக்கவேண்டிய தீவிரவாத முகாம்களை குறித்துக் கொடுத்ததும் நாங்கள் தான். ஒரு மாதத்துக்கு முன்பே, பாக்தாதியை கொலை செய்யவேண்டிய இந்த மிஷின் நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து பின் வாங்கியது, துருக்கி படைகளை எங்களை நோக்கி நகரச் செய்தது. இதனால், பாக்தாதியை பின் தொடர்வதையும் சேர்த்து எங்களது ஸ்பெஷல் ஆபரேஷன்களை எங்களால் தொடர முடியவில்லை. துருக்கியின் படை நகர்வு இந்த ஆபரேஷனை தாமதமாக்கியது”
குர்திஷ் படைகளின் சிறப்பு ஆலோசகரான போலட் கேன் ட்வீட் செய்திருக்கும் எந்தத் தகவலையும் குர்திஷ் அரசாங்கம் மறுக்கவில்லை. மேலும் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
தனது இடம் தாக்கப்படுவதை அறிந்த பாக்தாதி மிக வேகமாக செயல்படத் தொடங்கி, பதுங்கு குழிக்குள் தனது குழதைகளுடன் சென்றுவிட்டார். தாக்குதல் நடத்திய படைகள் அங்கு பாக்தாதியை சுற்றிவளைத்தாலும், உள்ளே செல்ல முடியாமல் தவித்தன. அப்போது அந்த வாசல் வழியே சென்றால் உயிர்பலி அதிகமாக இருக்கும் என்பதால், சுவற்றை குண்டுவைத்து தகர்த்து உள்ளே நுழைந்தனர். அப்போது தனது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து பாக்தாதி இறந்துபோனதும், அவரது சிதறிய உடலின் பாகங்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதன்பின், ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட டி.என்.ஏ பரிசோதனை கருவியின் மூலம் சோதனை செய்து, இறந்தது பாக்தாதி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். அத்துடன், பதுங்கு குழியில் பாக்தாதியின் தற்கொலை அங்கி வெடிப்பதற்கு முன்பு கமாண்டோ வீரர்களின் மீது பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான பாக்தாதியின் முகத்தை வைத்து, Facial Recognition கருவியின் மூலமும் கொல்லப்பட்டது பாக்தாதி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
இப்படி வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ‘கெய்லா முல்லர்’ மிஷினில் குர்திஷ் SDF படைகளின் பங்கு குறித்து ஏற்பட்ட விவாதத்தை, அவர்களது சிறப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் மேலும் பலமாக்கியுள்ளனர்.
பாக்தாதியைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25,000,000 டாலர் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பணத்தைப் பெறப்போகும் அந்த நபர், SDF படைக்கு பாக்தாதி பற்றிய தகவல்களையும், அவரது உள்ளாடையை திருடிக் கொண்டுவந்துக்கொடுத்த அந்த உளவாளியாகவே இருக்கமுடியும். SDF இப்போது இந்த தகவல்களை வெளியிடுவதற்குக் காரணம் 177 கோடிகளா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. குர்திஷ் படைகளைக் கைவிட்டுவிட்டுச் சென்ற அமெரிக்காவைவிட, தற்போது அவர்களுடன் இருக்கும் மக்களின் நம்பிக்கையை குர்திஷ் அரசாங்கம் பெறவேண்டியது அவசியமான ஒன்று. SDF அமைப்பின் உதவி எவ்வளவு முக்கியமானது என அமெரிக்கா குறிப்பிடத் தவறியதால், தங்களுக்கான பெருமையை தங்களது மக்களுக்காக அவர்களே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.
�,