^’96’ கதை திருட்டு: இயக்குநர் விளக்கம்!

Published On:

| By Balaji

96 திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என்று பாரதிராஜாவின் துணை இயக்குநர் சுரேஷ் கூறி வந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது வரை ரூ 50 கோடி வசூலைத்தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் 96படத்தின் கதை என்னுடையது என்று சுரேஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு குற்றசாட்டு கூறினார். பாரதிராஜா இயக்க இருந்த ‘பால்பாண்டி என்கிற பாரதி’ என்ற படத்தின் கதையை தான் எழுதியுள்ளதாகவும், அந்த கதைதான் 96 படத்தின் கதை எனவும் சுரேஷ் கூறினார்.

இது குறித்து இயக்குநர் பாரதிராஜா, “இயக்குநர் மருதுபாண்டியிடம் சுரேஷ் இந்த கதையை கூறியிருக்கிறார். பிறகு ஒரு நாள் பிரேம் குமார் மூலம் விஜய் சேதுபதியிடம் பேசலாம் என அவர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவேயில்லை. இதற்கிடையே 96 படத்தின் டைட்டிலில் ‘நன்றி மருது பாண்டியன்’ எனக் குறிப்பிட்டிருப்பது எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் படத்திலும் நடித்திருக்கிறார். நான் இது தொடர்பாக மருது பாண்டியிடம் கேட்டபோது, அந்தக் கதையையே நான் மறந்துவிட்டேன் என்று கூறினார். அவருக்கு படத்தின் நன்றி என கிரெடிட் கொடுத்திருக்கிறார்கள். எப்படி கதையை மறக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குநர் பிரேம்குமார் இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், “இந்த படம் வெளியானது முதலே படத்தின் கதை குறித்து சர்ச்சைகள் வரத்தொடங்கின. தற்போது படம் வெற்றியான பிறகு இது பெரிதாகி உள்ளது. என்னால் என் படத்தின் வெற்றியை கொண்டாட முடியவில்லை.

92 கதைக்கும் 96 கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 96 படத்திற்கான முழு பவுண்டட் கதை என்னிடம் உள்ளது. 96 கதை என்னுடையது தான் என்பதை நிரூபிக்க ஆதாரம் உள்ளது. என் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்த கதை. பக்ஸ், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா ஆகியோர் என்னிடம் கதை விவாதத்தில் இருந்தனர்.

ஒளிப்பதிவாளர் எப்படி படம் இயக்கலாம் என கேட்கின்றனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இருந்து தான் இயக்குநரானார். நான் பிலிம் இன்ஸ்டியுட்டில் படிக்கும்போதே குறும்படங்கள் இயக்கி உள்ளேன். அதனால் படம் இயக்குவது பெரிய விஷயம் அல்ல.

பாரதிராஜா கொச்சையான வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் என்னை திட்டியிருக்கிறார். இதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். சுரேஷ் அளித்திருக்கும் பேட்டியில் படத்தின் இடைவேளை அவர் யோசித்தது போலவே இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நாங்கள் பதிவு செய்திருந்த ஒரிஜினல் ஸ்கிரிப்டில் வேறு ஒரு இடைவேளையைத் தான் நாங்கள் வைப்பதாக இருந்தோம். அப்படி இருக்கையில் அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

மேலும் நேரம் காரணமாக தான் இப்போது படத்தில் இருக்கும் இடைவேளை சீனை தேர்வு செய்தோம். ஆனால் இது ஒன்றும் பெரிய காவிய சீன் இல்லை. பாரதிராஜாவிடம் கதை கூறும் போது இடைவேளை சீனை கேட்டு அவர் தன்னை கட்டியணைத்ததாக சுரேஷ் கூறியிருக்கிறார். அந்த சீனுக்காகவா பாரதிராஜா கட்டியணைத்தார்?

நாயகி ஜானகி ரசிகையாக இருப்பதும் அவர் யோசித்து வைத்தது தான் என்கிறார். இதே போல ஓரு படத்தில் கெளசல்யா சுசிலா ரசிகையாக இருப்பது போன்று கதை வரும். எனவே இது சாதாரணமாக அனைவருக்கும் தோன்றியிருக்க கூடிய யோசனை தான். 96 படம் தொடர்பாக என் மீது எழுத்தாளர் சங்கத்தில் சுரேஷ் புகார் கொடுத்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் அதை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். என் பிள்ளை என்னுடையது என நிரூபிக்க வேண்டிய தருணம் இது” என்றார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share