ரேஷன் கார்டு இருந்தால் கடன் வழங்கப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த நிலையில் மதுரையில் நேற்று (மே 30) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்குக் கடன் அளிப்பது எளிமையாக்கப்படும். விவசாயிகள், வியாபாரிகள் நகைக்கடனாக கிராமுக்கு ரூ.3,000 பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். சிறு, குறு வியாபாரிகள் பயனடையும் வகையில் தனி நபர் கடனாக 50,000 ரூபாய் வழங்கப்படும்.
ரேஷன் கார்டை மட்டும் காண்பித்து இந்தக் கடனை பெற்றுக்கொள்ளலாம். 350 நாட்களுக்குள் இந்தக் கடனை திரும்பச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் கடனை செலுத்தினால் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
ஒன்றிணைவோம் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை என்று சாடிய செல்லூர் ராஜு, “பத்து, இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுகிறது. ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என ஸ்டாலின் கூறுகிறார். இக்கட்டான நேரத்தில் முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் குறை கூறும் ஸ்டாலினைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
**எழில்**�,