yசொந்த மண்ணில் 25ஆவது வெற்றி: இந்தியா உலக சாதனை!

Published On:

| By Balaji

புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியைத் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி முக்கியமான உலக சாதனையைப் படைத்திருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன் பெற்று நேற்று (அக்டோபர் 13) காலை இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. உமேஷ் யாதவ், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வால் 108 ரன்களும், விராட் கோலி 254 ரன்களும் எடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி. நேற்றைய நான்காவது நாளில் தென்னாப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

**இந்தியா படைத்த உலக சாதனை**

இதுவரை ஆஸ்திரேலியா மட்டுமே சொந்த மண்ணில் 10 டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக வென்றிருந்தது. இந்த வெற்றி மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 11ஆவது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது நம் இந்திய அணி. இது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாகும்.

இந்தியா 2013ஆம் ஆண்டு முதல், சொந்த மண்ணில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 25 போட்டிகளில் வென்றது இந்தியா. இந்தப் போட்டிகளில் வெறும் ஒரு போட்டி தோல்வியும், மற்ற போட்டிகள் ‘டிரா’வும் ஆகியுள்ளன. இதற்கு முன் இந்தியா தோற்ற அந்த ஒரு டெஸ்ட் போட்டியும், இதே புனே மைதானத்தில்தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது இந்தியா. கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share