Yசூடான் விபத்து: தமிழர்களின் நிலை?

Published On:

| By Balaji

சூடானில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் தலைநகர் கார்டும் பகுதியில் ஷீலா செராமிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குச் செவ்வாய்க் கிழமை எல்பிஜி கேஸ் டேங்கர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 130 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் என்று சூடான் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் 16 இந்தியர்களைக் காணவில்லை என்றும் ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செராமிக் தொழிற்சாலையில் பணியாற்றிய இந்தியர்கள் உயிரிழந்தது வருத்தமடையச் செய்கிறது. தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எமர்ஜென்சி ஹாட்லைன் (+249-921917471) வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விபத்தின் போது 53 இந்தியர்கள் பணியிலிருந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சூடானில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சில தமிழர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியத் தூதரகம் மூலம் காணாமல்போன தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ராமகிருஷ்ணன், வெங்கடாசலம் மற்றும் ராஜசேகர் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பணியாற்றி வந்ததாகவும், விபத்துக்குப் பிறகு அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயகுமார், பூபாலன், முகமது சலீம் ஆகிய 3 பேர் தீ விபத்தில் சிக்கிக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜசேகர், கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் விபத்தில் பலியானதும் தெரியவந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel