மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியாக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா காரணமாகக் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இந்த வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டும் பொதுத் தேர்வு கிடையாது, ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதனால் மேற்குறிப்பிட்ட மூன்று வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் விடுமுறை எனத் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்தது. தற்போது 9,10,11 மாணவர்களுக்குப் பள்ளிகளில் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு, 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையாக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ” தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி ஆய்வு செய்து, 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. இதனைத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நடைபெறும் வகையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசிரியர்கள் வரும் வாரத்திலிருந்து தேர்தல் பணி பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவுள்ளக் காரணத்தினாலும் கொரோனா பரவலிருந்து மாணவர்களை முழுமையாகப் பரிசோதித்துப் பாதுகாக்க ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வாய்ப்பில்லாதக் காரணத்தினாலும் பொதுத்தேர்வை எழுதவுள்ள 12 ஆம் வகுப்பைத் தவிர்த்து ஏற்கனவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க ஆவண செய்யவேண்டும்” என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
**-பிரியா**
�,