அன்னம் அரசு
பெற்றோர்களின் ஆசைக்குப் பிள்ளைகளை வளர்க்காமல், பிள்ளைகளின் ஆசைகளுக்கேற்றாற் போல் அவர்களை வளரவிட வேண்டும் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.
தேனி மாவட்டத்தில் போக்கிரித்தனம், அடிதடி எனப் பதினெட்டுப்பட்டியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தூக்கு துரை (அஜித் குமார்). கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் இவருக்கு அதிக செல்லம். அதே ஊருக்கு மும்பையிலிருந்து மருத்துவ முகாமுக்காக வருகிறார் நிரஞ்சனா (நயன்தாரா). வழக்கமான தமிழ் சினிமா போல் இருவருக்கும் ஆரம்பத்தில் மோதலில் உருவாகும் அறிமுகம் பின் காதல், கல்யாணம், குழந்தை என முடிகிறது.
நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது எனும்போது இருவரும் ஒரு பிரச்சினை காரணமாகப் பிரியும் சூழல் உருவாகிறது. எதனால் அந்தப் பிரச்சினை உருவாகிறது, அதற்குத் தீர்வு காணப்பட்டதா என்ற கேள்விகளுக்குத் தனது அதிரடியான திரைக்கதை மூலம் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.
அஜித் நடிப்பில் தொடர்ந்து சில படங்கள் சரியாகப் போகாத சூழலில் சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் மூலம் திருப்புமுனையாக அமைந்தது. இதே கூட்டணியில் உருவான இரு படங்கள் தோல்வி கண்ட நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளிவந்துள்ளது விஸ்வாசம்.
கூட்டுக் குடும்பம், ஊர்த் திருவிழா போன்றவற்றை மறந்து வரும் இந்தத் தலைமுறைக்கு அவற்றைத் திகட்டத் திகட்ட நினைவூட்டுகிறது படம்.
அஜித் – சிவா கூட்டணியில் உருவான வீரம், வேதாளம் ஆகிய படங்களின் பாதிப்பு இதில் அதிகம் இருப்பதால் படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஆக்ஷன் படமா, குடும்ப சென்டிமென்ட் படமா என்பதிலும் குழம்பியிருக்கிறார் இயக்குநர்.
அஜித் – நயன்தாரா பிரிவதற்கான காரணமும், வில்லன் பழி வாங்குவதற்கான காரணமும் வலுவில்லை. அப்பா, மகள் பாசத்தை வைத்து உருவாகியிருக்கும் இதில் இவ்வளவு அடிதடிகள் தேவையா என்று கேள்வி எழுகிறது.
‘மாஸ்’ காட்சிகளில் அஜித் கவனம் ஈர்க்கிறார். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், பஞ்ச் டயலாக் எனக் கலக்கியிருக்கும் அஜித் தேனி வட்டார வழக்கு பேசியதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். திடீர் திடீரென்று கோவை வழக்கு வந்து போகிறது.
நயன்தாரா, அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என ரசிக்க வைக்கிறார். அறம் திரைப்படத்தில் வரும் தனது கதாபாத்திரத்தையும் நினைவூட்டுகிறார்.
ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா என ஒரு பெரிய காமெடிப் பட்டாளமே இந்தப் படத்தில் இருந்தாலும் நகைச்சுவையில் வறட்சி தெரிகிறது. இவர்களில் இரண்டாம் பாதியில் வரும் விவேக் தனித்துத் தெரிகிறார். வில்லன் கதாபாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஜெகபதிபாபு தனது நடிப்பில் மிளிர்ந்தாலும், அந்தக் கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் இருப்பது திரைக்கதையில் விறுவிறுப்பைக் குறைக்கிறது.
இமானின் இசையில் பாடல்கள் வழக்கம்போல் இருந்தாலும், பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார். கிராமத்தின் பசுமையும், நகரத்தின் நெரிசலையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வெற்றி. திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் மிரட்டல். ரூபனின் படத்தொகுப்பு கச்சிதம். இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் ஸ்லோ மோஷன் சலிப்புத் தட்டுகிறது.
படத்தில் அழுத்தமான திரைக்கதை இல்லாவிட்டாலும், வெற்றியின் ஒளிப்பதிவில் அஜித் என்ற ஒற்றை நபரை மாஸாகக் காட்டியதன் மூலம் அஜித்தின் ரசிகர்களுக்கான படமாக அமைகிறது. லாஜிக் ஓட்டைகள், வழக்கமான காட்சிகள் எனப் பல குறைகள் இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது படக்குழு.
பொதுவாகப் பெரிய ஹீரோக்களுக்குச் சில படங்கள் சறுக்கும் வேளையில் அவர்கள் கமர்ஷியலாகத் தங்களை நிறுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். அப்போது கிராமத்து நாயகனாகவும், குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவராகவும் அந்த நாயகன் அடையாளம் காட்டப்படுவார். அப்படிப்பட்ட சூழல் அஜித்துக்கு வீரம் படத்துக்குப் பிறகு இதில் நிகழ்ந்துள்ளது.�,”