ஸ்டீரியோ டைப் கதைகளை உடைத்து, ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் எவையெல்லாம் இருக்கக் கூடாது என்று விவாதத்தில் ஒதுக்குவார்களோ… அவற்றையே முன்வைத்து உருவானது டெட் பூல் திரைப்படம். அதனாலேயே முதல் பாகம் வசூலில் அதிரடி காட்டியது. ஆனால், அதன் இரண்டாம் பாகத்தில் இப்படியொரு ஓப்பனிங் காட்சியை எதிர்பார்க்கவில்லை. டைட்டில் கார்டுக்கு முன்பான காட்சியில், டெட் பூல் எனப்படும் வேட் வில்சனின் காதலி அவர் கைகளிலேயே இறந்து போகிறார். கண்கலங்கிய நிலையில் கொலைகாரனைத் துரத்திச் சென்று அவனுடன் விபத்துக்குள்ளாகிப் பிழைத்துவரும் வேட் வில்சன் கண்கலங்க வைக்கிறார். ஆனால், அதற்கடுத்து ஜேம்ஸ் பாண்டு பட பாணியிலான டைட்டில் கார்டு டிசைனில் சேட்டைகள் செய்து உடனே அந்தச் சோகத்தை மறக்க வைக்கிறார்.
நமக்கென்று சொந்தமென சொல்லிக்கொள்ள யாராவது வேண்டும் என X-Men டீமுடன் சேரும் வேட், ஒரு மியூட்டண்டைப் பிடிக்கச் செல்லும்போது தனது அணியினருக்கு எதிராகவே மாறுகிறார். அடுத்து அந்த மியூட்டண்டுடன் சேர்ந்து ஜெயிலுக்குச் செல்லும் வேட் வில்சன், அங்கு அவரைத் தாக்கும் வில்லனிடம் சிறுவனான மியூட்டண்டுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை என்று எஸ்கேப் ஆகிறார். இப்படியே ஒருவர் மாறி ஒருவராகத் தாவித் தாவிக் கடைசியில்… படம் பாருங்கள் தெரியும்.
ஒரு மனிதன் இறந்துகொண்டிருக்கும்போது பேசும் வசனங்கள் ஹாலிவுட் சினிமாவில் மிகப் பிரசித்தி. அது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் சரி. ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் ரஜினி வசனம் பேசுவாரே அதுபோல. ஆனால், அந்தக் காட்சியையும் இத்தனை அரட்டையாகக் கலாய்க்க டெட் பூல் கேரக்டரால் மட்டுமே முடியும்.
டெட் பூல் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை என்பதைப் படம் முழுக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மைதான். டெட் பூல் சூப்பர் ஹீரோவாக இருக்கவே முடியாது. இறந்துபோன காதலிக்காகத் தானும் இறந்துபோக வேண்டும் என முயற்சிக்கும் சூப்பர் ஹீரோவை இதுவரை பார்த்ததில்லை. ஆனால், பாவம் சாகா வரம் பெற்றுவந்திருக்கும் வேட் வில்சனுக்கு அதுவும் வாய்க்கவில்லை. டிரெய்லரிலேயே பார்த்திருந்தாலும், வேட் வில்சனின் காதலி ‘Kiss Me Like You Miss Me’ என்று இரண்டு முறை சொல்லும் வசனங்களும் வித்தியாசமான உணர்வை உருவாக்குகின்றன.
எட்டு, ஒன்பது, பத்து பாகங்களாகப் படம் எடுப்பது முக்கியமில்லை. முந்தைய பாகத்தில் விட்டு வைத்த ஓட்டைகளை அடுத்த பாகங்களை வைத்து அடைக்க முயற்சிக்காமல், அவற்றை அப்படியே விட்டுவிட்டுப் புதிய கதையை உருவாக்குவது எப்படி என்ற வித்தையை டெட் பூல் கிரியேட்டர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். இதற்கான கதையை எழுதியவர்கள்தான் மார்வெல் உருவாக்கும் மற்ற படங்களிலும் பணியாற்றுகிறார்கள் என்றாலும், இந்தப் படத்தை அவர்கள் பார்த்த பார்வை வேறு. சட்டதிட்டங்கள், வரையறைகளை முன்பே விதித்துவிட்டு அதற்குள் ஒரு கதையைக் கட்டுப்படுத்துவதன் தாக்கம் எதுவென்பதை டெட் பூல் 2 வெற்றியின் தாக்கம் உணர்த்தினால் சரி.
�,”