சீனாவில் ஆன்லைன் மூலமாகத் தருவிக்கப்பட்ட பார்சலில் இறந்துபோன குட்டி முதலையும் பல்லியும் இருந்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வணிகத்தில் செல்போனை ஆர்டர் செய்தவர்களுக்கு, செங்கல்லும் சோப்பும் அனுப்பப்பட்ட தகவல்கள் நம் நாட்டில் பல முறை செய்திகளாக வெளியாகியுள்ளன. இதனை மிஞ்சும் விதமாக, சீனாவில் ஒரு பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பார்சல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஜெஜியாங் மாகாணத்தில் சுய்சாங் நகரில் வசித்து வருபவர் ஜாங். இவர், சமீபத்தில் சுகாதாரப் பராமரிப்புக்கான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு அனுப்பப்பட்ட 4 பார்சல்களில் ஒன்றில் மட்டும் அழுகிய நாற்றம் வெளிவந்தது. அதனைக் கண்டு அச்சமடைந்த ஜாங், தனது கணவரிடம் அதனைத் திறக்கச் சொன்னார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பார்சலைத் திறந்தபோது, மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதனுள், இறந்த நிலையில் குட்டி முதலையொன்றும் ஒரு பல்லியும் இருந்தன. இதனை வீடியோ எடுத்து, அவர்கள் வெய்போ எனும் சீன சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது சீனாவில் வைரலாக பரவியது. இதுபற்றி, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், பண்ணையொன்றில் வளர்க்கப்பட்ட சியாமிஸ் ரக முதலை அதுவென்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சலில் க்யூஆர் கோடு மற்றும் முறையான ஆவணங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக, சீனாவில் முதலை வளர்ப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், வேறிடத்துக்குச் செல்ல வேண்டிய பார்சல் இடம் மாறி ஜாங் முகவரிக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. பார்சல் தயாரானபோது குட்டி முதலையும் பல்லியும் உயிருடன் இருந்ததாகவும் இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.�,