கேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட மழைப்பொழிவு குறித்து அமெரிக்காவின் நாசா அமைப்பு கணித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளதால், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் கேரளாவில் இதுவரை 373 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கேரளாவில் தற்போது வெள்ளம் வடிந்துவரும் நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்புகிறது.
கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்திய [மழை வெள்ள பாதிப்புகள்](https://www.youtube.com/watch?v=gdPr1FND35g), நாசாவின் செயற்கைக்கோள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. சர்வதேச அளவில் மழைப்பொழிவைப் கணக்கிடும் அமைப்புடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள், இந்த விபரங்களைச் சேகரித்து அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் அரை மணிநேரத்திற்கு முறை மழைப்பொழிவு பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நாசா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கோடை காலத்தையொட்டி வரும் பருவக்காற்று அதிகமான மழைப்பொழிவைத் தருவது வழக்கமானதுதான். சில சமயம் பருவமழைக் காலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி மிக அதிக மழைப்பொழிவைத் தரும்.
இதன்காரணமாக, கேரளாவில் இந்த ஆண்டு, மிக அதிக மழை பெய்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் கேரளா இதுபோன்ற கடுமையான வெள்ளத்தைக் கண்டதில்லை. இதையடுத்து, கேரள வெள்ளத்தை அதிதீவிரப் பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீடியோவில் ஆகஸ்ட் 13 முதல் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் மழைப்பொழிவு கணிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில், நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இரண்டாவது பிரிவில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மிகவும் தீவிரமாக மழை பெய்துள்ளது. இந்த மழையால் கேரளமும், கர்நாடகத்தின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முதல் பிரிவின்படி குறைந்தபட்சம் 12 செ.மீ. முதல் 35 செ.மீ. வரையிலும், இரண்டாவது பிரிவின்படி குறைந்தபட்சம் 25 செ.மீ. முதல் 40 செ.மீ. வரையிலும் மழைப்பொழிவு இருந்துள்ளது. அதிகபட்சமாக 46.9 செ.மீ. மழைப்பொழிவு இருந்துள்ளது. மழைப்பொழிவு அதிகம் இருந்த பகுதிகள் சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”