9நச்சாக மாறும் காவிரி!

public

மாசடைந்த கங்கை ஆற்றை சீரமைக்க ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவரும் நிலையில், அதைவிட பல மடங்கு அதிகமாக நச்சுக்கழிவுகள் கலந்திருக்கும் காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வேதனையளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை நடத்திய ஆய்வுகளில், தென்னிந்திய நதிகளில் காவிரியில் தான் மிக அதிக அளவில் நச்சுக்கழிவுகள் கலந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. காவிரி ஆற்றில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு 76.9 டன் வீதம் நச்சு மற்றும் இராசயனப் பொருட்கள் வங்கக்கடலில் கலப்பதாகச் சொல்கிறது இந்த ஆய்வு.

தென்னிந்தியாவின் பெரிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளில் இந்த அளவு முறையே 37 மற்றும் 67.2 டன்னாக உள்ளன. கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் குடிக்க முடியாததாக மாறியிருக்கிறது. காவிரி ஆறு மாசுபடுவதற்கு முக்கியக் காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் அதில் கலக்கவிடப்படுவது தான்.

சாயப்பட்டறைக் கழிவுகள், வேளாண்மைக் கழிவுகள் போன்றவை நொய்யல், அமராவதி, பவானி ஆகிய ஆறுகளில் கலக்கின்றன. கங்கையில் கலக்கும் மாசுகளை விட 600 மடங்கு அதிகமாக காவிரியில் மாசுக்கள் கலக்கின்றன. இதனால் காவிரியால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து, அவர் இன்று (டிசம்பர் 23) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“காவிரியில் மாசு கலப்பது குறித்தும், அதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் கழிவுகள் கலப்பதால் கார்சினோஜென் எனப்படும் வேதிப்பொருள் உண்டாகிறது. இதனால் காவிரி ஆற்றில் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நொய்யல் ஆற்றுக் கழிவுகள் கலப்பதால் காவிரி ஆற்றில் டையாக்சின் என்ற இரசாயனப் பொருட்கள் உருவாகின்றன. டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையும் அதிகரிக்கும். பக்தர்கள் புனித நீராடும் கும்பகோணம் பகுதியில் காவிரியில் 52 வகையான நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. இதனால் காவிரியில் நீராடினால் நோய் தீரும் என்ற நிலை மாறி நோய் சேரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், காவிரி நீர் மாசுபடுவது 5 கோடி மக்களின் உடல்நிலையிலும், விவசாயத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், கர்நாடகத்தில் காவிரியில் கழிவுகள் கலந்து விடப்படுவதை தடுக்கவோ, உள்ளூரில் சாயக்கழிவு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் கலப்பதால் ஆற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் போதெல்லாம், நொய்யலாற்றில் சாயக்கழிவுகள் கலக்கவில்லை; மாறாக மக்கள் சோப்பு போட்டு குளிப்பதாலும், துணி துவைப்பதாலும் தான் நுரைப் பெருக்கெடுத்து ஓடுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் விஞ்ஞான முறையில் விளக்கம் அளிக்கிறார். இவர்களை வைத்துக்கொண்டு காவிரி உள்ளிட்ட நதிகளை எவ்வாறு பராமரிக்கப் போகிறோம் என்பதை நினைக்கும்போதே தமிழக நீர்நிலைகளின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சமும் கவலையும் ஏற்படுகிறது.

கங்கை ஆறு மாசுபட்டுள்ள நிலையில், அதை சீரமைக்க ரூ.20,000 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை விட 600 மடங்கு அதிக மாசு கலக்கும் காவிரியை தூய்மைப்படுத்த எந்தத் திட்டமும் வகுக்கப்படாதது வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் காவிரியை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ். அதோடு, காவிரியைக் காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தனித்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *