நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தொடரில், நிலுவையில் உள்ள மசோதாக்கள், இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரிக்குறைப்பு ஆகிய இரண்டு அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இந்த குளிர்கால கூட்டத் தொடரில் ஈடுபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், குளிர்கால கூட்டத் தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி), காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி முக்கிய வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரது வாட்ஸ்-அப் தகவல்கள் இஸ்ரேலைச் சேர்ந்த என் எஸ் ஓ நிறுவனம் உளவு பார்த்த விவகாரம் குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படவுள்ளது.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இன்று சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலும், நாளை(நவம்பர் 17) நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.�,