நிரம்பியது வைகை: வெள்ள எச்சரிக்கையுடன் உபரி நீர் திறப்பு!

Published On:

| By Balaji

அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 30ஆவது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் வெள்ள எச்சரிக்கையுடன் ஏழு பிரதான மதகுகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதில் முழுக் கொள்ளளவாக 69 அடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணை முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியது.

ஏற்கனவே வைகை அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அணை நிரம்பியதைத் தொடர்ந்து மூன்றாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக அணையின் மேல்புறத்தில் உள்ள அபாய சங்கு மூன்று முறை ஒலிக்கப்பட்டது. பின்னர் அணைக்கு வந்த 1,699 கன அடி தண்ணீர் உபரிநீராக ஏழு பிரதான மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த மதகுகளை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார்.

வைகை அணையில் திறக்கப்பட்ட உபரிநீரில் 900 கன அடி பாசனத்துக்காக கால்வாயிலும், 69 கன அடி நீர் மதுரை மாநகரக் குடிநீர் தேவைக்காகவும், மீதமுள்ள 730 கன அடி நீர் ஆற்றிலும் செல்கிறது. வைகை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 30ஆவது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட ஐந்து மாவட்ட மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share