நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 84 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று (ஜூலை 29) மட்டும் 52,763 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்லாக் செயல்முறையின் மூன்றாம்கட்ட அறிவிப்பினை மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்டது. பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு பல தளர்வுகளை இம்முறை அறிவித்துள்ளது.
அதன்படி ஏற்கனவே நடைமுறையிலிருந்த இரவு நேர ஊரடங்குக்குத் தடை. யோகா பயிற்சி நிலையங்கள், ஜிம் ஆகியவை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனையின் அடிப்படையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற பயிற்சி நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை. வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சர்வதேச விமான பயணம் குறிப்பிட்ட அளவுக்கு அனுமதிக்கப்படும். பின்னர் இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எது எதற்கு தடை?**
மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை, பூங்காக்கள், மதுபான விடுதிகள், ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
சமூகம், அரசியல் ,விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் ,மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் உட்பட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. எனினும் இந்தச் செயல்பாடுகளை எந்த தேதியிலிருந்து அனுமதிப்பது என்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப தனியாக முடிவு செய்யப்படும்.
கட்டுப்பாடு பகுதிகளில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கைக் கண்டிப்புடன் மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகள் கவனமாக வரையறுக்கப்பட்டு அப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தடை செய்யலாம். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளும் விதிக்கலாம். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்துக்கு உள்ளேயும் தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு இ- பர்மிட் அல்லது இ-பாஸ் தேவை இல்லை.
நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,