கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன.
கடந்த வாரம் ஓலா நிறுவனம் சுமார் 1400 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் பிரபல வாடகை கார் நிறுவனமான ஊபர் இந்தியா, தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஊபர் நிறுவனத்தின் தெற்காசியா தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் இன்று (மே 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், உபேர் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில், வாடிக்கையாளர் சேவை, ஓட்டுநர் ஆதரவு பிரிவு, வர்த்தக மேம்பாடு, நிதி, மற்றும் சந்தை பிரிவுகளில் பணியாற்றும் 25 சதவிகித ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வைரஸ் தொற்று தாக்கத்தால் கணிக்க முடியாத அளவுக்கு நிறுவனம் பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகவும் இதன் காரணமாகப் பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ஊபர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சோகமான நாள் என்று தெரிவித்துள்ள ஊபர் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்படுபவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் பணி நீக்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த பத்து வாரங்களுக்கான ஊதியம் கொடுக்கப்படும் என்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஊபர் டெக்னாலஜிஸ் 23 சதவிகித ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் இந்தியாவிலும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஊபர் மட்டுமல்லாமல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
**-கவிபிரியா**�,