சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தயாரித்தல் தொழில் பிரதானமானது. ஆனால், பலரும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக பட்டாசுகளைத் தயாரிப்பதும், கையாளுவதினாலும் பட்டாசு விபத்துகள் நடக்கின்றன. சமீப காலமாக சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெடி விபத்து அதிகமாக நடக்கின்றன.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, நேருஜி நகர் பகுதியில் ராமநாதன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இரண்டு அடுக்கு மாடி வீட்டில், கீழ்தளத்தில் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும், அங்கேயே பேன்சி ரக பட்டாசுகளை அதிக அளவில் சட்ட விரோதமாக பதுங்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் நேற்று (நவம்பர் 15) வேல்முருகன், மனோஜ்குமார், கார்த்தீஸ்வரி, சமீதா, பஞ்சவர்ணம் ஆகியோர் வேலை பார்த்துள்ளனர். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் இடித்து தரைமட்டமானது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் வந்தாலும், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தவண்ணமாக இருந்ததால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியின்போது வேல்முருகன், மனோஜ்குமார் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்த இருவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வேலை செய்து கொண்டிருந்த மற்ற மூன்று பெண்களையும் காணவில்லை. மாயமான பெண்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றிய பின்னரே உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா என தெரியவரும்.
விபத்துக்கு காரணமாக இருந்த குழாய் கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் ராமநாதன் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து சிவகாசி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**-வினிதா**
�,