பட்டாசு விபத்து: ஆலை உரிமையாளரை தேடும் மூன்று தனிப்படை!

Published On:

| By Balaji

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடு முருகன். இவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட களத்தூர் நாகலாபுரத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர். ஜனவரி 1ஆம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஆலையின் ஆறு அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இன்று(ஜனவரி 3) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

இந்த விபத்து தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் வெடி மருந்து கையாளுவதற்கான முறையான பயிற்சி அளிக்காததே வெடி விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வெடி பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் (286), மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் (337), இறப்பு ஏற்படுத்துதல்( 304 ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

போலீஸ் தன்னைத் தேடுவதைத் தெரிந்துக் கொண்ட வழிவிடு முருகன் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஜனவரி 1 அன்று புத்தாண்டு பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், சிவகாசியில் வெடி விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதனால், விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share