மன அழுத்தம், மனப்பதட்டம் கொண்டவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைகளில், ’செல்லப் பிராணியாக ஒரு நாய் வாங்கி வளருங்க… மன அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும்’ என்பதும் ஒன்றாக இருக்கிறது. மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அளவுக்கு பாசத்தை கொட்டும் நாய்களுக்கும் மனப் பதட்டம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
பின்லாந்தில் இருக்கும் ஹெலன்ஸ்கி பல்கலைகழகத்தின் சார்பில், ஹான்ஸ் லோகி என்பவரது தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த வாரம் சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியானது. கிட்டத்தட்ட 264 வெவ்வேறு வகைகளை சேர்ந்த 14,000 நாய்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கும் அந்த ஆய்வில், ஏதாவது ஒரு வித மனப்பதட்ட நோயால் 75% நாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.
நாய்களின் உரிமையாளர்களைக் கொண்டு அவர்களுடைய வளர்ப்பு நாய்களின் முக்கிய ஏழு நடவடிக்கைகளான சத்த உணர்திறன், கவனிக்கும்தன்மை குறைவு , பொதுவான பயம், உயரம் குறித்த பயம், அடம்பிடிக்கும் குணம், கோபம் மற்றும் தனித்து விடப்பட்ட பதட்டம் ஆகியன குறித்த மதிப்பீட்டைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவற்றில் நாய்களில் 32% நாய்களின் மனப் பதட்டத்திற்கு காரணம் அதிக சத்தம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இடி மற்றும் பலத்த வெடி சத்தங்களால் நாய்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மற்ற நாய்கள் குறித்த பயம்(17%) இரண்டாவது இடத்தையும், புதிய மனிதர்கள் குறித்த பயம்(15%) மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. நாய்களுக்கு வயது அதிகரிக்கும் அதே வேளையில் அதிக சத்தத்தின் மீதான பயமும் அதிகரிக்கிறது எனவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற குணநலன்களின் காரணமாக பொது இடங்களில் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை நாய்களால் உருவாகிறது.
குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நாய்களுக்கு ஒரே மாதிரியான மனப் பதட்டம் இருப்பதை பார்க்கும்போது இவை மரபு ரீதியிலான ஒரு பழக்கமாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்றவர்களைப் பார்த்துக் குலைப்பது,பொது இடங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது, தனித்து விடப்படும் நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கடிப்பது போன்ற செயல்களில் அவை ஈடுபடுவதாக தரவுகள் கூறுகின்றன. இதில் ஆண் நாய்கள், பெண் நாய்களை விட கோபத்துடனும் அதீத சுறுசுறுப்பாகவும் நடந்து கொள்வதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2019 ஆண்டில் வெளியான ஒரு ஆய்வு முடிவையும் ஆய்வுக் குழு தலைவர் லோகி இங்கு குறிப்பிட்டுள்ளார். அதன்படி மற்றவர்களிடம் நன்றாகப் பழகும் நாய்களில் உள்ள ஜீன்களின் தொடர்பு ஒன்று அதன் சத்தத்திற்கு பயப்படும் தன்மைக்கும் காரணமாக உள்ளது. எனவே நாம் தோழமை உணர்வு கொண்ட நாய்களை தேர்ந்தெடுக்கும்போது நம்மையும் அறியாமல் சத்தத்திற்கு பயப்படும் நாய்களை தேர்வு செய்கிறோம் எனக் கூறுகிறார் லோகி. மேலும் நாய்களின் வளரும் சூழலும் அதன் குணநலன்களில் முக்கியபங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாய் வகைளுக்கும் எந்த மாதிரியான குணங்கள் எனத் தெரிந்துகொள்ளும் போது நமக்கான நாய்களை தேர்ந்தெடுப்பது சுலபமாகும் எனத் தெரிவிக்கும் லோகி, கலப்பு நாய்களை செயற்கை முறையில் உருவாக்கும் போது மனப் பதட்டம் ஏற்படுத்தும் ஜீன்களை நீக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் இல்லாத நாய்களை உருவாக்கலாம் என லோகி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கருத்து கூறியிருக்கும் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் அனிந்திதா பத்ரா, “மனப்பதட்டமற்ற நாய்களை உருவாக்குவதன் மூலம் வேறு ஏதாவது புது பிரச்சனைகள் உருவாகலாம் எனவும் பொதுவாக ஒரு உயிரின் பண்புகள் என்பது பல ஜீன்களின் தொகுப்பு. எனவே குறிப்பிட்ட பண்புகளை கொண்ட நாய்களை செயற்கையாக உருவாக்க நினைக்கும்போது பல எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் நோக்கம் குறித்து லோகி கூறும் போது, “நாய்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதும், மனிதர்களின் மன வியாதிகளுக்கு நாய்களால் எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறியவுமே இந்த ஆய்வை நடத்தினோம். இது கண்டிப்பாக உயிரினங்களின் உடல் மற்றும் நலனை மேலும் மேம்படுத்த உதவும்” எனக் கூறியுள்ளார். உலகிலுள்ள அரிதான விலங்குகளை ஜெனிடிக் முறையில் உருவாக்கிக்கொண்டிருந்த உலகம், அதிகமாக வாழும் நாய்களின் பக்கமும் தற்போது திரும்பியிருக்கிறது.
**-பவித்ரா குமரேசன்**
-�,