10ஆம் வகுப்புத் தேர்வு: ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா?

Published On:

| By Balaji

பத்தாம் வகுப்புத் தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதற்குள் நிலைமை சீராகிவிடுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 -ஜூன் 12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியூர்களிலிருந்து மாணவர்கள் வருவதற்கான இடர்பாடு, ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு, தேர்வை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்தநிலையில் பல்வேறு தரப்பினரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் நிலைமை சீராகிவிடுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் வெளிமாநிலத்தில் சிக்கித் தவித்தவர்கள் அழைத்து வரப்பட்டு பெரும்பாலும், பள்ளி கல்லூரிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகான கொரோனா பரிசோதனையின் முடிவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு வேளை பாதிப்பு இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதுபோன்று பள்ளிகளை, நாள்தோறும் வெளியூர்களிலிருந்து அழைத்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி தங்க வைக்க பயன்படுத்தும் நிலையில், அவர்கள் அனைவரும் அனுப்பப்பட்டு ஜூன் 15க்குள் கிருமி நாசினி கொண்டு பள்ளிகள் சுத்தம் செய்யப்படுமா? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதோடு ஜூன் ஜூலையில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில் அந்த சமயத்தில் தேர்வு வைப்பது சாத்தியமா? மாணவர்களின் உடல்நிலை தான் முக்கியம் அப்போது தான் அவர்களால் தேர்வு எழுத முடியும் என்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி மாணவர்கள் தரப்பில் மீண்டும் பாடம் நடத்தித் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வரும் நிலையில் ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?. மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share