மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதற்கு சிவசேனா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 161 இடங்களை வென்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. ஆயினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனாவின் முதல்வர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அம்முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேர்தலுக்கு முன் செய்துகொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். கூட்டணி ஏற்படுவதற்குக் காரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், மேற்கொண்டு பேசுவோம், இல்லையேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என நேற்று (நவம்பர் 7) அவரது இல்லத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பில் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. சிவசேனா கூறுவது போல அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தற்போதைய சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.
இந்நிலையில், இன்றுடன் பதவிக்காலம் முடிவதால், முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ராஜ்பவனுக்குச் சென்ற அவர் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன் பின்னர் பேசிய அவர், “எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு தந்த மகாராஷ்டிர மக்களுக்கு எனது நன்றி. மாற்று ஏற்பாடு என்னவாகவும் இருக்கலாம். புதிய அரசு அல்லது குடியரசு தலைவர் ஆட்சி என எதுவாகவும் இருக்கலாம்.
முதல்வர் பதவி தொடர்பாக எந்த முடிவும் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எடுக்கப்படவில்லை. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதாக எங்கும் சொல்லவில்லை. அமித் ஷா மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் இதனை கூறியுள்ளனர்.
ஆட்சியமைப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததிற்கு சிவசேனா தான் 100 சதவீதப் பொறுப்பு. புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டதால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஆனால் எனது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. பாஜகவுன் பேசுவதில்லை என்ற முடிவெடுத்த சிவசேனா, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சவார்த்தை நடத்தியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே உத்தவ் தாக்கரே அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக கூறினார். பாஜக -சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ள நிலையில் உத்தவ் தாக்கரே இதுபோன்று ஏன் கூறுகிறார் என அப்போதே நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
பால்தாக்கரே மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். நாங்கள் உத்தவ் தாக்கரேக்கு எதிராகக் கூட எந்தக் கருத்தையும் கூறியதில்லை. ஆனால், கடந்த 5 வருடங்களில் குறிப்பாக கடந்த 10 நாட்களில், மோடி உட்பட அவர்கள் பாஜக தலைமை மீது கூறிவரும் கருத்துக்கள் சகித்துக்கொள்ளும் வகையில் இல்லை” எனக் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் கருத்துக்குப் பிறகு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஒரு நாள் சிவசேனா முதலமைச்சர் ஆள்வார் என்று நான் பால் தாக்கரேவுக்கு உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அமித் ஷாவோ தேவேந்திர பட்னாவிஸோ தேவையில்லை” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
Uddhav Thackeray: I had promised Balasaheb that there will be a Shiv Sena Chief Minister one day, and I will fulfill that promise, I don’t need Amit Shah and Devendra Fadnavis for that. pic.twitter.com/F1T1m0mhGn
— ANI (@ANI) November 8, 2019
அதே சமயம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அடுத்த உத்தரவு வரும் வரை ரங் ஷரதா ஹோட்டலில் தங்குமாறு சிவசேனா உத்தரவிட்டிருக்கிறது.
�,”