தமிழகத்தை உலுக்கிய கோவை இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை ஜவுளிக் கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான்(11). ரித்திக் (8).தனியார் பள்ளியில் படித்து வந்த இவர்கள் 2010 ஆகஸ்ட் 29 ஆம் தேதி கடத்தப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது வேனிலிருந்து தப்பிக்க முயன்றதால் 2010 நவம்பரில் மோகன கிருஷ்ணன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவ்வழக்கில் மனோகரனுக்குக் கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்த தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உறுதி செய்தது. இதை எதிர்த்து மனோகரன் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பாலிநாரிமன் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரு நீதிபதிகள் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து, மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்யலாம் என்று தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ஒரு நீதிபதி மட்டும், மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இரு நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்யலாம் என்று தெரிவித்ததால், மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மனோகரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,