முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் காலமானதையடுத்து, தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். அவர்களுடன் அரசியல் நிலவரங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அப்போது புகழேந்தியுடனான சந்திப்பு குறித்து பொன்னையன், செம்மலை உள்ளிட்டோர் கேட்க, அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்ததை நேற்று மாலை 7 மணி பதிப்பில் [சசிகலா தூதை ஏற்றுக்கொண்டேன்: எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/10/28/118) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இதுபற்றிய மேலும் சில தகவல்களும் கிடைத்துள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் துக்கம் விசாரிக்க வந்தனர். அவர்களுடனும் அமர்ந்து பேசும்போது, புகழேந்தி சந்தித்தது குறித்த பேச்சை எடப்பாடி எடுத்திருக்கிறார்.
“புகழேந்தி என்ன பார்க்க வந்த உடனேயே சால்வையைப் போட்டுட்டு, அண்ணே நான் பேசினது எதையும் மனசுல வெச்சுக்காதீங்கன்னு சொன்னாரு. அதுக்கு நான், ‘யாருதான் பேசல, எல்லாரும்தான் பேசுனாங்க… நீங்க எதிரிலே இருந்து பேசுனீங்க, என்கூட இருக்கவங்க பின்னால நின்னு பேசுறாங்க. அதப்பத்திலாம் நான் கவலைப்படலன்னு’ சொன்னேன். அதுக்கப்புறம் கட்சிய இணக்கிறத பத்தி சின்னம்மா சொன்னதையெல்லாம் என்கிட்ட சொன்னாரு. நான் தினகரனை மட்டும் சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டேன். அதான் 29ஆம் தேதி சின்னம்மாவைப் பாத்துட்டு அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வந்து உங்கள மறுபடியும் மீட் பன்றேன்னு சொல்லிட்டு போயிருக்காரு புகழேந்தி” என்று அவர்களிடம் சொன்னார் எடப்பாடி.
உடனே ஜேசிடி பிரபாகர், “அப்படி இணையுறதா இருந்தா தினகரனோட சேர்த்து வெற்றிவேலையும் சேர்த்துக்கக் கூடாது” என்று சொல்ல, அதற்கு எடப்பாடியோ, ‘நீங்க சொல்றது சரிதான்… கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாங்க. அவங்க ரெண்டு பேரையும் சேர்க்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன்” என்று கூறினார்.
சசிகலா இந்தளவு மனசு மாறினது எப்படி என்று அவர்கள் கேட்டனர். “சின்னம்மா மனசு மாறினதுக்குக் காரணம் திவாகரன்தான்னு சொல்றாங்க. அவருதான் பெங்களூரு போய் ஒரு வாரம் கிட்ட தங்கி சின்னம்மாகிட்ட பேசிருக்காரு. நிறைய பேரை சிறைக்குள்ள அனுப்பியும் பேச வெச்சிருக்காரு. அவங்களும் தினகரனோட செயல்பாடுகளை பத்தி எடுத்துச் சொல்லியிருக்காங்க. அதுக்கு அப்புறம்தான் சின்னம்மா மனசு மாறி இந்த முடிவை எடுத்திருக்கிறதா சொல்றாங்க” என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.�,