Eதலித் இளைஞர்கள் சித்ரவதை!

Published On:

| By Balaji

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இரு இளைஞர்களை ஒரு கும்பல் கொடுமையாக தாக்குவது பதிவாகியுள்ளது. இதில் ஒருவரைத் தரையில் போட்டு மிதித்துத் தாக்குகின்றனர். அவரது காலிலும் வயிற்றிலும் மிதிக்கின்றனர். அப்போது ஒருவர் ஸ்க்ரூ டிரைவரை பெட்ரோலில் நனைத்து கீழே படுக்க வைக்கப்பட்டவரின், பேண்ட்டை கழற்றி ஆசன வாயில் நுழைக்கிறார். இதனால் அந்த நபர் வலி தாங்க முடியாமல் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுவதும், கதறுவதும் பதிவாகியிருக்கிறது. அதுபோன்று அருகிலிருக்கும் மற்றொரு இளைஞரையும் கடுமையாக தாக்குகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த 14ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து நேற்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர்கள் ராஜஸ்தான், நாகவுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இருவரும் தலித்துகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த இருவரும் கர்னவ் நகரில் உள்ள இருசக்கர வாகன சேவை மையத்துக்குச் சென்றுள்ளனர். தங்களது வாகனத்தை சர்வீஸூக்கு விடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பணத்தைத் திருடியதாக இருவர் மீதும் குற்றம்சாட்டி, கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு கருணையின்றி கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பீம்சிங், ஐடன் சிங், ஜசுசிங் மற்றும் சவாய்சிங் என 7 பேரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.

”விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகவுர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ”நாகவுரில் நடைபெற்ற இந்த கொடூரமான நிகழ்வுக்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். சட்டத்தின்படி அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலரும் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வடமாநிலங்களில் பல இடங்களில் தலித்துகள் மீது வன்முறைகள் அதிகரித்து வருகின்றது என்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share